பெண் உடைமாற்றுவதை மீண்டும் மீண்டும் படம் எடுத்த குடிமைத் தற்காப்பு அதிகாரி

1 mins read
305709d6-a8ce-4d9d-be00-ea624820870d
ஒரே பெண்ணையே மீண்டும் மீண்டும் படம் எடுத்து ஆடவர் குற்றம் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஊடகம்

ஒருவரின் அந்தரங்கத்தைப் படமாக எடுத்து ரசிப்பது குற்றம். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்தக் குற்றத்தைச் செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் இருந்த அந்த 44 வயது ஆடவர், பெண் ஒருவர் உடை மாற்றுவதை அவரது அனுமதியின்றி படம் எடுத்ததாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டு உள்ளது.

2024 மார்ச் 26 முதல் அந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதிவரை அவர் அதே பெண்ணை மேலும் நான்கு முறை படம் எடுத்து அதே குற்றத்தைச் செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண்ணின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு குற்றவாளியைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரி தற்போது வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வியாழக்கிழமை (ஏப்ரல் 10) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது.

அந்த ஆடவர் வழக்கு விசாரணைக்காக மீண்டும் மே 6ஆம் தேதி நீதிமன்றம் வர உத்தரவிடப்பட்டு உள்ளது.

குற்றச் செயல்களுக்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்படும் அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் வேலையில் இருந்து அவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்