தேசிய சேவையாளர் மரணத்தில் தொடர்புடைய அதிகாரிமீது குற்றச்சாட்டு

தேசிய சேவையாளர் மரணத்தில் தொடர்புடைய அதிகாரிமீது குற்றச்சாட்டு

2 mins read
81b0c15a-617e-4859-8079-36322309face
தீப்பிடித்த வீட்டில் கோவை மட்டும் தனியாக விட்டுவிட்டு அவருடைய உயரதிகாரியான கமில் எவரிடமும் சொல்லாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றதாகக் கூறப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீயணைப்பு நடவடிக்கையின்போது 19 வயது தேசிய சேவையாளர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய உயரதிகாரிமீது திங்கட்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த முகம்மது கமில் முகம்மது யாசின், 38, தமது செயலால் இன்னொருவரின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்குத் தீங்கு நேரும் வகையில் நடந்துகொண்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி ஹெண்டர்சன் சாலை, புளோக் 91ல் உள்ள ஒரு வீட்டில் தீச்சம்பவம் நிகழ்ந்தது. அங்குத் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எட்வர்ட் கோ என்ற தேசிய சேவையாளர் உயிரிழந்தார்.

அவ்வீட்டில் கோவை மட்டும் தனியாக விட்டுவிட்டு அவருடைய உயரதிகாரியான கமில் எவரிடமும் சொல்லாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றதாகக் கூறப்பட்டது.

அவரது இச்செயல், வழக்கமான செயலாக்க நடைமுறைகளுக்கு எதிரானது எனச் சிங்கப்பூர் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

உயிர்வாயுக் கலனில் உயிர்வாயு தீர்ந்துபோனதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோ உயிரிழந்ததாக உடற்கூறாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

கருவி செயலிழந்ததால் கோவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார் எனக் கூறுவதற்கான எந்த ஆதாரமும் விசாரணையில் கிடைக்கவில்லை எனக் காவல்துறை கூறியது.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றோர் அதிகாரியை நேர்காண விரும்புவதாக கமில் தரப்பு வழக்கறிஞர் அஸ்வின் கணபதி நீதிபதியிடம் கேட்டதாகவும், அதற்கு அரசுத் தரப்புச் சாட்சிகளுடன் தொடர்புகொள்ள அவருக்கு அனுமதி இல்லை என்றாலும் உரிய அனுமதி பெற்று அந்த அதிகாரியிடம் அவர் பேசலாம் என நீதிபதி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அன்றைய நாளில் கமில் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், கமிலுக்கு நாலாண்டுவரை சிறையும் அல்லது $10,000 வரை அபராதமும் அல்லது அவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்