மியன்மார் நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கிய ஆடவர் ஒருவரை அங்குச் சென்றிருக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் எட்டு மணிநேரம் பேராடி உயிருடன் மீட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடந்த அந்த மீட்புப் பணியை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மியன்மாரின் நேப்பிடோ தீயணைப்புப் பிரிவுடன் சேர்ந்து மேற்கொண்டதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. முன்னதாக சனிக்கிழமை (மார்ச் 29) 80 பேரைக் கொண்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக் குழுவும் தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நான்கு ‘கேனின்’ நாய்களும் மியன்மாருக்கு அனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மியன்மாரின் மேண்டலே நகருக்கு அருகே உள்ள பகுதியை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.
நிலநடுக்கத்தால் மியன்மாரில் 1,600 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். அண்டை நாடான தாய்லாந்திலும் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், மியன்மாரில் 3,400க்கும் மேலானோர் காயமுற்றனர். அந்நாட்டில் குறைந்தது 139 பேரைக் காணவில்லை.
நேப்பிடோவில் உள்ள ஸெபுத்திரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் தாங்கள் தேடல், மீட்புப் பணிகளைத் தொடங்கியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சமூக ஊடகத்தில் தெரிவித்தது.
பாதி இடிந்து விழுந்த மூன்று தளக் கட்டடத்தின் இடிபாடுகளில் ஆடவர் ஒருவர் சிக்கியிருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன் பிறகு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மியன்மார் மீட்புப் பணியாளர்கள் இரு தரப்பினரும் சேர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.