நகர மையத்துக்குப் புத்துணர்ச்சியூட்டும் நோக்கத்தில் செயல்படுத்தப்படும் இரு நகர புத்துயிரூட்டல் திட்டங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) தெரிவித்துள்ளார்.
அதிக அடுக்குமாடி வீடுகளை மையப் பகுதிகளில் அமைப்பது, தற்போதுள்ள வணிகக் கட்டடங்களை மறுசீரமைப்பது ஆகியவற்றின் வழி நகர மையத்தை மறுசீரமைக்க இத்திட்டங்கள் கைகொடுக்கின்றன.
இந்தத் திட்டங்களை மேற்கொள்ள மேம்பாட்டாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் மத்திய வர்த்தக வட்டார ஊக்குவிப்பு, உத்திபூர்வ மேம்பாட்டு ஊக்குவிப்பு ஆகிய இரு திட்டங்களும் மேலும் மேம்படுத்தப்படும் என்றார் திரு லீ.
ரேடாஸ் எனும் சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் வசந்தவிழா மதிய உணவு விருந்தில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்டவர்களிடம் பேசிய திரு லீ, 2024 நவம்பரில் ஐந்தாண்டுகளை எட்டிய இரு திட்டங்களையும் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்துள்ளதாக கூறினார்.
மத்திய வர்த்தக வட்டார ஊக்குவிப்புத் தி்ட்டம், மத்திய வர்த்தக வட்டாரத்தின் பழமையான, கணிசமாக அலுவலகங்களைக்கொண்ட கட்டடங்களை கலப்பு-பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்ற ஊக்குவிக்கிறது. இது, அலுவலகங்கள் முதல் வீடுகள் அல்லது ஹோட்டல்கள் வரை கட்டடத்தின் பயன்பாட்டை மாற்ற, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச மொத்த தரைப் பரப்பளவை அதிகரிக்க மேம்பாட்டாளர்களுக்கு அனுமதி வழங்குகிறது.
உத்திபூர்வ மேம்பாட்டு ஊக்குவிப்பு திட்டம், தற்போதுள்ள வணிகக் கட்டடங்களின் உரிமையாளர்கள் தங்கள் அக்கம்பக்கத்தாருடன் கூட்டு மறுசீரமைப்பு திட்டத்தைக் கைக்கொள்ள ஊக்குவிக்கிறது. இத்தகைய மறுசீரமைப்பு, தெரு அல்லது அந்த வட்டாரத்தை மாற்றியமைக்கும்.
இவ்விரு திட்டங்களுக்கும் இதுவரை நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன், இரு வழிகளில் அவை மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஆன்சன், சிசில் பகுதிகளில் செய்யப்படும் மேம்பாடுகள், அங்குள்ள கட்டடங்கள் அனைத்து வசதிகளையும் கொண்ட நீண்டகால வாடகைக் குடியிருப்பை வழங்கும்பட்சத்தில் தற்போதுள்ள வணிகப் பயன்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்ள மத்திய வர்த்தக வட்டார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் அதிக நீக்குப்போக்கு வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்து வசதிகளையும் கொண்ட நீண்டகால வாடகை அடுக்குமாடிக் குடியிருப்புகள், குறைந்தபட்சம் மூன்று மாத வாடகைக் காலம் கொண்டவை. இவை ஏழு நாள்கள் குறைந்தபட்ச வாடகை காலம் கொண்ட மற்ற குடியிருப்புகளிலிருந்து மாறுபட்டவை.
இந்த மாற்றத்துக்கு முன்னர், தஞ்சோங் பகார், ராபின்சன் ரோடு, ஷெண்டன் வே பகுதிகளில் உள்ள அலுவலக மேம்பாடுகளுக்கு மட்டும் இந்த நீக்குப்போக்கு வழங்கப்பட்டது.
இந்த மேம்பாடுகள், தங்கள் அலுவலக இடத்தின் கணிசமான பகுதியை வணிகமல்லாத பயன்பாடுகளுக்கு மாற்றும் வரை, வர்த்தக வட்டார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் அவை தற்போதுள்ள வணிக பயன்பாட்டை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டன.
இவ்விரு திட்டங்களிலும் இடம்பெறும் இரண்டாவது மாற்றம், இவற்றின்கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகள், புதிய நீடித்த நிலைத்தன்மை விதிகளைப் பூர்த்தி செய்யும் திட்டவரைவைக் கொண்டிருக்க வேண்டும்.
வர்த்தக வட்டார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 17, உத்திபூர்வ மேம்பாட்டு ஊக்குவிப்புப் திட்டத்தின்கீழ் 12 என இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் பெரும்பாலானவற்றுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக திரு லீ கூறினார்.
ஆன்சன் - தஞ்சோங் பகார் பகுதியின் நியூபோர்ட் பிளாசா, ஸ்கைவாட்டர்ஸ் மற்றும் 15 ஹோ சியாங் ரோடு, 51 ஆன்சன் ரோடு ஆகிய நான்கு திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன.
இந்தத் திட்டங்கள் நிறைவடையும்போது ஆன்சன் - தஞ்சோங் பகார் பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட புதிய குடியிருப்புகள், ஹோட்டல்கள், கடைகள், உணவங்காடி நிலையங்கள், புதிய பொது இடங்கள் ஆகியவை இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

