சிங்கப்பூருக்கும் சவூதி அரேபியாவின் ஜெடாவுக்கும் இடையிலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்படும் காலக்கெடுவை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை ஸ்கூட் விமான நிறுவனம் நீட்டித்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக, சிங்கப்பூரிலிருந்து ஜெடா செல்லும் டிஆர்796 விமானச்சேவையும் ஜெடாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பும் டிஆர்797 விமானச்சேவையும் பிப்ரவரி 28ஆம் தேதிவரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்று திங்கட்கிழமை (நவம்பர் 2) வெளியிடப்பட்ட அறிக்கையில் ஸ்கூட் நிறுவனம் தெரிவித்தது.
ஜெடா நகரத்திற்கு வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்பட்டு வந்த விமானச் சேவை முன்னர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆக அண்மை நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மலிவுக் கட்டணப் பிரிவான ஸ்கூட் மட்டுமின்றி, சிங்கப்பூர் ஏர்லைன்சும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது விமானச் சேவை ரத்து நடவடிக்கைகளை 2027ஆம் ஆண்டுவரை நீட்டித்துள்ளது;
அண்மையில் அது சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான தனது விமானச்சேவைகளும் பிப்ரவரி 28ஆம் தேதிவரை நிறுத்தப்படும் என்று அறிவித்தது.
பாதிக்கப்பட்ட சிங்கப்பூர்-துபாய் விமானச்சேவைகள் எஸ்கியூ494 மற்றும் எஸ்கியூ495. விமானச்சேவை ரத்து நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள், தங்களது பயணச்சீட்டில் பயன்படுத்தப்படாத பகுதிக்கு முழுத் தொகையையும் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்று இரு விமான நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
நேரடியாக ஸ்கூட் நிறுவனத்தின் வாயிலாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு மின்னஞ்சல்மூலம் ஸ்கூட்டைத் தொடர்புகொள்ளலாம்.
பயண முகவர்கள் அல்லது பங்காளித்துவ விமான நிறுவனங்கள்மூலம் பயணச்சீட்டுகளை வாங்கியவர்கள், அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விமானச்சேவை ரத்தால் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்குப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஸ்கூட் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
