ஸ்கூட் நிறுவனம், புதிதாக நான்கிலிருந்து ஆறு இடங்களுக்குப் பயணிகள் விமானச் சேவைகளை வழங்கவுள்ளது.
அந்நிறுவனம் புதிய விமானங்களை தருவிக்கவுள்ளது. அவற்றின் மூலம் கூடுதல் இடங்களுக்குச் சேவை வழங்க முடியும் என்று அது தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு புதிதாக 14ல் இருந்து 16 விமானங்கள் வந்திறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்கூட் தலைமை நிர்வாகி லெஸ்லீ தெங் கூறியுள்ளார். அவற்றில் நான்கு E190-E2 வகை குறுகிய உடலமைப்பைக் கொண்ட விமானங்கள், ஏழுலிருந்து ஒன்பது ஏர்பஸ் A320 வகை விமானங்கள், அகலமான உடலமைப்பைக் கொண்ட முன்று போயிங் 787 வகை விமானங்கள் அவற்றில் அடங்கும்.
இயந்திரக் கோளாறு காரணமாக ஸ்கூட்டின் ஏர்பஸ் A320நியோ வகை விமானங்கள் அண்மையில் செயல்பாட்டிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டன. அதோடு, ஸ்கூட் வழங்கும் சேவைகளில் கூடுதலான வேளைகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அவற்றைப் பற்றியும் திரு தெங் செய்தியாளர்களிடம் பேசினார். வானிலை காரணமாக தாமதங்கள் ஏற்பட்டதாகவும் திரு தெங் விளக்கினார்.
புதிய விமானங்கள் கிடைப்பதன் முலம், ஸ்கூட்டால் கூடுதல் இடங்களுக்குச் சேவை வழங்க முடிவதோடு ஏற்கெனவே சேவை வழங்கிவரும் இடங்களுக்குக் கூடுதலான சேவைகளை வழங்க முடியும் என்றும் திரு தெங் குறிப்பிட்டார்.
அதேவேளை, தென்கிழக்காசியாவுக்கென ஸ்கூட், மனிதவளம், நிதி போன்ற வளங்களைக் கூடுதலாக ஒதுக்குவதாகவும் அவர் சுட்டினார்.
சென்ற ஆண்டு, அந்நிறுவனம் 20 விழுக்காட்டு வளங்களைத் தென்கிழக்காசியாவுக்கு ஒதுக்கியது. இவ்வாண்டு அந்த விகிதம் 24லிருந்து 25 விழுக்காடாக அதிகரிக்கும்.