தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒன்றரை மணி நேரம் முன்கூட்டியே கிளம்பியதற்காக மன்னிப்புக் கேட்ட ஸ்கூட்

2 mins read
9506cc0c-5160-4e81-b188-6841c929a362
ஸ்கூட் விமானம் TR456 சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்கு அதிகாலை 4.50 மணிக்குப் புறப்பட இருந்தது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்கூட் விமானம் ஒன்று, நவம்பர் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டதைவிட கிட்டத்தட்ட 1½ மணி நேரம் முன்னதாக சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது தொடர்பாக மலிவுக்கட்டண விமானச் சேவையான ஸ்கூட் மன்னிப்புக் கோரியுள்ளது.

ஸ்கூட் விமானம் TR456 சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்கு அதிகாலை 4.50 மணிக்குப் புறப்பட இருந்தது.

ஆனால், ‘செயல்பாட்டுக் காரணங்களால்’ விமானம் முன்னதாகவே அதிகாலை 3.21 மணிக்கு புறப்பட்டது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ஸ்கூட் தெரிவித்தது.

எத்தனை பயணிகள் பாதிக்கப்பட்டனர், விமானம் முன்னதாகவே புறப்பட்டது பற்றி பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்களை மலிவுக் கட்டண விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட பயணிகள் அதே நாளில் காலை 7.04 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ‘எஸ்கியூ104’ மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அது கூறியது.

இடையூறு, வசதிக்குறைவு ஏற்பட்டதற்காக பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களிடமும் மன்னிப்புக் கோருவதாக ஸ்கூட் கூறியது.

குறைந்தது ஒரு பயணி பாதிக்கப்பட்டதாக ‘ஸ்டோம்ப் ’ அறிக்கை தெரிவித்தது.

சாங்கி விமான நிலையத்திலிருந்து விமானப் பயண நேரங்களை அறியத் தரும் ‘SG Flight Info’ செயலியைத் தாம் பார்த்துக்கொண்டே இருந்ததாகவும் அதில் விமானம் புறப்படும் நேரம் அதிகாலை 4.50 என்றே இருந்ததாகவும் அவர் ஸ்டோம்பிடம் கூறினார். ஆனால், புறப்பாட்டுப் பகுதிக்குப் போனபோது அது காலியாக இருந்ததைப் பார்த்து அவர் பதற்றமடைந்தார். அருகிலிருந்த வேறு புறப்பாடு பகுதிச் சென்று உதவி கேட்டார். ஸ்கூட் ஊழியர் ஒருவர் அவரை முனையம் 1லிருந்து முனையம் 3க்கு அனுப்பினார். “ஸ்கூட் ஊழியர் எங்களிடம் மன்னிப்புக் கேட்டார். அது எப்படி நடந்தது என்று தமக்குத் தெரியாது என்று கூறினார். “அவர் எங்கள் பெயர், தொலைபேசி என், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை வாங்கினார். நிறுவனம் எங்களுக்கு $150 இழப்பீடு தரும் எனக் கூறினார்,” என்று அந்தப் பயணி தெரிவித்தார். அவர் இரண்டு மணி நேரம் தாமதமாக கோலாலம்பூர் சென்றடைந்ததால், அடுத்த இணைப்பு விமானத்தில் அவரால் ஏற முடியவில்லை. தமது பயணத்தைத் தொடர அவர் கூடுதலாக மூன்று விமானச் சீட்டுகளை வாங்கி வேண்டி இருந்தது. அப்பயணியைத் தொடர்புகொண்டு அவருக்கு உதவியதாக ஸ்கூட் தெரிவித்தது. இதேபோன்ற மற்றொரு சம்பவம் 2023 ஜனவரி 18ல் நடந்தது. இந்தியாவின் அமிர்தசரசிலிருந்து 4 மணி நேரம் முன்னதாக சிங்கப்பூருக்குக் கிளம்பியது. நேர மாற்றத்தைப் பயண முகவர் தெரிவிக்காததால் 29 பேர் விமானத்தைத் தவறவிட்டனர். அந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மாற்றம் குறித்து கொடுக்கப்பட்ட மின்னஞ்சல், குறுந்தகவல் வழியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அப்போது ஸ்கூட் கூறியது.

குறிப்புச் சொற்கள்