பொதுத் தேர்தலுக்கு பிந்திய நிதி திரட்டலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி தனது தேர்தல் விளம்பரங்களை விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் அந்தக் கூட்டணி $8,000 நிதி திரட்டியுள்ளது.
இந்த நிதி திரட்டல் பற்றிய செய்தியை கூட்டணியின் தலைமைச் செயலாளர் திரு டெஸ்மண்ட் லிம் திங்கட்கிழமை (மே 26) ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார். அத்துடன், இதன் தொடர்பில் திரட்டப்பட்ட நிதிக்கு சரிசமமாக $8,000ஐ தானும் அளிப்பதாக உறுதி கூறியுள்ளார்.
இதன்படி, திரட்டப்பட்ட $16,000யும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைக்காசு நிதியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர வசதி குறைந்த மக்களுக்கு என இலவச உணவு வழங்கும் உள்ளூர் அறநிறுவனமான வில்லிங் ஹார்ட்ஸ் அமைப்புக்கு திரு டெஸ்மண்ட் லிம் $5,000 வழங்கினார்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் விளம்பரங்கள் ஒவ்வொன்றும் $20 வெள்ளிக்கு விற்பனையாயின.
நிதி திரட்டு குறித்து நன்றிகூறும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 25) இடம்பெற்றது. அதில் பேசிய திரு லிம், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கூட்டணி ஆதரவாளர்கள், தொண்டூழியர்கள் மற்றும் கட்சி ஊழியர்கள் ஆகியோரின் கடும் உழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்
சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு இதயபூர்வமாக தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார். அத்துடன், தொடர்ந்து பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி வாக்காளர்களுக்கு தங்கள் கூட்டணி பணியாற்றும் என்றும் திரு லிம் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்காதவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அப்பொழுது, “சில நேரங்களில் பொதுத் தேர்தலில் சந்திக்கும் தோல்வியும் உண்மையிலேயே தோல்வியாகவும் இருப்பதில்லை; அது ஒரு மறுவாய்ப்பு,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய திரு டெஸ்மண்ட் லிம், “உங்களுடைய தீர்ப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அடுத்து 2030ஆம் ஆண்டு வரக்கூடிய பொதுத் தேர்தலில் உங்களுடைய நம்பிக்கையையும், முடிந்தால் உங்கள் வாக்குகளையும் பெறும் வகையில் மேலும் கடுமையாக உழைப்போம் என்றும்,” வாக்காளர்களை நோக்கிக் கூறியுள்ளார்.