தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் ‘சீ’ நிறுவனத்தின் புதிய மின்னிலக்க நிதித் தலைமையகம் திறப்பு

2 mins read
cc7e64a8-d802-49b6-8f59-a61889d9cf55
‘சீ’ நிறுவனத்தின் புதிய மின்னிலக்க நிதித் தலைமையகத் திறப்புவிழாவில் அதன் நிறுவனர் ஃபாரஸ்ட் லீ (இடது), மனிதவள அமைச்சர் டான் சீ லெங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ‘சீ’, தனது மின்னிலக்க நிதிச் சேவைகளுக்காகச் சிங்கப்பூரில் புதிய தலைமையகத்தைத் திறந்துள்ளது.

ரோசெஸ்டர் காமன்ஸ் கட்டடத்தில் அமைந்துள்ள அந்த அலுவலகத்திற்கு புவன விஸ்தா எம்ஆர்டி நிலையத்திருந்து ஆறு நிமிடங்களில் நடந்துசென்றுவிடலாம்.

பத்துத் தளங்களுடனும் 200,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவிலும் அந்த அலுவலகம் அமைந்துள்ளது. அதன் ஒன்பதாம் தளத்தில் உள்ள கலையரங்கம் ஒன்றும் உள்ளது.

தொடக்கத்தில் 1,000க்கும் அதிகமான மின்னிலக்க நிதி வல்லுநர்களுடன் அந்த அலுவலகம் செயல்படும். ஆயினும், அங்கு 1,500 பேர்வரை பணியாற்றுவதற்கான இடவசதி இருக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட சந்திப்பு அறைகளையும் சிற்றுண்டியகம், உடற்பயிற்சிக்கூடம் போன்ற வசதிகளையும் அது கொண்டுள்ளது.

கைப்பேசிப் பணப்பைகள், கட்டணம் செலுத்தும் சேவை, வங்கியியல் உள்ளிட்ட மின்னிலக்க நிதித் தளங்களை ‘சீ’ நிறுவனம் வழங்குகிறது. முன்னதாக, அது ‘சீமணி’ (SeaMoney) என்று அழைக்கப்பட்ட நிலையில், தற்போது அது ‘மணி’ (Monee) எனப் பெயர்மாற்றம் பெற்றுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு திரு ஃபாரஸ்ட் லீயால் ‘சீ’ நிறுவனம் தொடங்கப்பட்டது.

மின்வணிகத்தளமான ‘ஷாப்பி’யை நடத்திவரும் அந்நிறுவனமே சிங்கப்பூரின் ஐந்து மின்னிலக்க வங்கிகளில் ஒன்றான மேரிபேங்க்கின் (MariBank) உரிமையாளர்.

“சீ என்பதைப் போல எழுதவும் உச்சரிக்கவும் எளிதாக இருப்பதால் ‘மணி’ என்ற பெயரைத் தேர்வுசெய்தோம்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.

சீ நிறுவனத்தின் 16ஆம் ஆண்டு நிறைவான வியாழக்கிழமையன்று (மே 8) அதன் ‘மணி’ அலுவலகம் திறக்கப்பட்டது. அந்நிகழ்வில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சிங்கப்பூரில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்திருப்பது சீ நிறுவனத்திற்கு முக்கியமான மைல்கல் என்று அமைச்சர் டான் குறிப்பிட்டார்.

“புதிய பொருளியல் ஒழுங்கை நோக்கியுள்ள இவ்வேளையில், சீ போன்ற முன்னணி நிறுவனங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வளர்ப்பது சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியம்,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்