செங்காங், பொங்கோல் வட்டாரங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பொது மருத்துவர்களை நாடிய பிறகு வழங்கப்படும் பராமரிப்புச் சேவையை விரைவில் சமூக சேவையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு மருத்துவர் குழுவிற்கும் ஒரு சமூகச் சேவை அமைப்புக்கும் இடையே உருவாக்கப்பட்டுள்ள புதிய பங்காளித்துவம் இதற்கு வகைசெய்கிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட பராமரிப்புச் சேவைகளை மருந்தகங்களைத் தாண்டி சமூக அளவிலும் வழங்க முடியும்.
இதனால் மேலும் சிக்கலான மருத்துவ, சமூக ரீதியான தேவைகள் இருக்கும் நோயாளிகளுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கும்.
முதலில், வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்துக்கு நடைபெறவுள்ள இத்திட்டத்தின்கீழ் ‘ஜிபி+ கோ-ஆப்பரேட்டிவ்’ (GP+ Co-operative) குழுவைச் சேர்ந்த பொது மருத்துவர்கள், ஆல்கின் சிங்கப்பூர் (Allkin Singapore) அமைப்பின் சமூக சேவையாளர்களுடன் பணியாற்றுவர். மருத்துவப் பரிந்துரைகள் (referrals) போன்றவற்றின் வாயிலாக நோயாளிகளுக்குப் பராமரிப்பு வழங்கப்படும்.
இரு தரப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இம்மாதம் 11ஆம் தேதி இத்திட்டத்தைத் தொடங்கின. இதன்வழி ஜிபி+ மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளை ஆல்கின் குழுவுடன் தொடர்புகொள்ள வைப்பர். அதேபோல் ஆல்கின், தங்களிடம் வரும் நோயாளிகள் உகந்த மருத்துவ ஆதரவைப் பெற, அவர்களை ஜிபி+ குழு மருத்துவர்களிடம் அனுப்பி வைக்கலாம்.
நோய்கள் வருவதற்கு முன்னர் அவற்றை அடையாளம் கண்டு தங்களைக் காத்துக்கொள்ள நோயாளிகளுக்கு உதவுவதும் அவர்களுக்குக் கூடுதல் சீரான பராமரிப்பு வழங்குவதும் இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
ஜிபி+, சிங்கப்பூர் தேசியக் கூட்டுறவுச் சம்மேளனத்தின்கீழ் (எஸ்என்சிஎஃப்) இயங்கும் குழுவாகும். அதில் குடும்ப மருத்துவர்கள், நிபுணத்துவ மருத்துவர்கள் உட்பட 120க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் உள்ளனர்.
ஜிபி+-ஆல்கின் பங்காளித்துவம், நோயாளிகள் குணமடைய உதவ அவர்களுக்கு சமூக அளவில் தகுந்த வளங்கள் இருப்பது அவசியம் என்ற விழிப்புணர்வு சிங்கப்பூரில் அதிகரித்திருப்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்

