சுமுகமாக நடைபெற்ற வாக்குப்பதிவு

3 mins read
1dcd4f90-894b-4d1d-8f82-2b2340d1529c
பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு சுமுகமாக நடந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அரசியல் வரலாறு இதுவரை காணாத அளவாக பலமுனைப்போட்டி நிலவிய 2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 9x.xx விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆயிரக்கணக்கான தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையில் தேர்தல் நாளான சனிக்கிழமை (மே 3) அன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு இரவு 8 மணி வரை நீடித்தது.

வாக்களிக்க கிட்டத்தட்ட 2.6 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

முன்னதாக வாக்களிப்பு தினத்தன்று உட்லண்ட்ஸ் வட்டாரம் தவிரத் தீவெங்கும் மழை கொட்டித்தீர்த்தது. எனினும் நிலவிய காலசூழலைப் பொருட்படுத்தாமல் தீவெங்கும் அமைக்கப்பட்டிருந்த 1,240 வாக்களிப்பு நிலையங்களிலும் காலை 7 மணியிலிருந்தே ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சிங்கப்பூரர்கள் பரவலாக வருகையளித்தனர்.

தற்போது நடைபெற்ற 2025 பொதுத் தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக மக்களின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ஆளும் மக்கள் செயல் கட்சியில் தொடங்கி சுயேச்சை வேட்பாளர்கள் வரை, 206 வேட்பாளர்கள் 32 தொகுதிகளில் 92 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பதவியைக் கைப்பற்றத் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்.

இதுவரை இல்லாத அளவாக 211 வேட்பாளர்கள், நாடாளுமன்றத்தின் 97 இடங்களுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் மசெக-வை தவிர வேறு எந்தவொரு எதிர்கட்சியும் போட்டியிடாமல் அதிர்ச்சியளித்தன.

எனவே, வேட்பு மனு தாக்கல் தினமான ஏப்ரல் 23ஆம் தேதியன்றே மசெக-வின் ஐவர் அணி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

மேலும், ஏறத்தாழ 70 ஆண்டுகளாக மக்கள் சேவையில் இருக்கும் ஆளும் மசெக முதன்முறையாக நான்காம் தலைமுறை தலைவர் திரு வோங் தலைமைத்துவத்தில் இத்தேர்தலை சந்தித்தது.

அதிலும், எப்போதும் இல்லாத அளவாக , அனைத்துலக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட அமெரிக்காவின் வரிக்கு வரி அரசியல் விளையாட்டு தொடங்கி, உள்ளூரில் அமலில் இருக்கும் மேயர் பதவி தேவையா என்பது வரை பல விஷயங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் முக்கிய விவாதமாக மாற்றியிருந்தன.

பெரியோர், மூத்தோர், சக்கரநாற்காலியில் தஞ்சமடைந்திருந்தோர், மணவாழ்வில் இணைந்த புதுமணத் தம்பதிகள், வெளிநாடு வாழ் சிங்கப்பூரர்கள் என பலரும் தங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போகிற பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய ஆர்வத்துடன் வரிசைப் பிடித்து வாக்களித்துச் சென்றனர்.

இதற்கிடையே ஜென்டிங் டிரீம் சொகுசுக் கப்பல் சிங்கப்பூரர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்து தரும் இலக்கில், முன்கூட்டியே சிங்கப்பூருக்குத் திரும்பியதும் தேர்தல் நாளில் அரங்கேறியது.

நண்பகல் வாக்கில் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவருடைய மனைவியும் கல்வி அமைச்சு (இவான்ஸ்) விளையாட்டு மண்டபத்தில் வக்களித்தனர்.

மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் அவருடைய மனைவி திருவாட்டி ஹோ சிங்கும் கிரசெண்ட் பெண்கள் பள்ளியில் வாக்களித்தனர்.

தேர்தல் தினத்தன்று சிங்கப்பூரர்கள் பலர் முற்பகலுக்கு முன்பதாகவே தங்கள் வாக்குகளை செலுத்திவிட்டுப் பணிக்கு செல்வதையும் பரவலாக காணமுடிந்தது.

நண்பகல் 12 மணி நிலவரப்படி 48 விழுக்காடாக பதிவாகியிருந்த வாக்கு விகிதம், மாலை 5 மணியளவில் ஏறத்தாழ 82 விழுக்காடாக பதிவாகியிருந்தது.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 95.81 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தது.

குறிப்புச் சொற்கள்