ஊழல் வழக்கில் பிரேசிலிய அதிகாரிகளுக்கு $168 மில்லியன் கொடுக்க இணங்கிய சீட்ரியம்

2 mins read
95b6fb69-0491-4d72-8308-f691cd9ca924
சீட்ரியம், அதன் அறிவிப்பைத் தொடர்ந்து சிங்கப்பூர் அதிகாரிகள் கூட்டுப் புலனாய்வை முடித்துக்கொண்டதாகத் தெரிவித்தது. - படம்: சீட்ரியம்

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள சீட்ரியம் நிறுவனம் நெடுங்காலம் நீடிக்கும் ஊழல் வழக்கின் தொடர்பில் சிங்கப்பூர், பிரேசிலிய அதிகாரிகளுக்கு $241.7 மில்லியன் அபராதம் கொடுக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.

கடல்துறை நிறுவனமான அது பிரேசிலின் ஆப்பரே‌ஷன் கார் வா‌‌ஷ் எனும் பெரிய ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. குத்தகைகளைக் கைப்பற்ற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. சீட்ரியம் நிறுவனம் முன்பு செம்ப்கார்ப் மரீன் என்று அழைக்கப்பட்டது.  

ஆண்டின் முற்பாதிக்கான வருவாய் விவரங்களை வெளியிடுவதற்கு முதல் நாள் (ஜூலை 30) நிறுவனத்தின் அறிவிப்பு வந்துள்ளது.

$168.4 மில்லியன் அபராதத்தைக் கொடுப்பதற்கு அந்நாட்டின் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம், இதர அதிகாரிகளுடன் ஒப்பந்தமொன்றை அது செய்துகொண்டது.

சீட்ரியம் நிறுவனம் சிங்கப்பூரின் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்துடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு $141.5 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும். இருப்பினும் சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் அந்த உடன்பாட்டுக்கு முதலில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர்க் காவல்துறையின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் உத்தேசக் குற்றங்கள் குறித்த கூட்டுப் புலனாய்வை மேற்கொண்டிருந்தன. சீட்ரியம், அதன் அறிவிப்பைத் தொடர்ந்து இரண்டு அமைப்புகளின் புலனாய்வும் முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தது. நிறுவனத்தின் மீதோ அதிகாரிகள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று சீட்ரியம் கூறியது.

நிறுவன நிர்வாகத்தில் உயர் தரத்தையும் வர்த்தக நேர்மையையும் தொடர்ந்து கட்டிக்காக்கப்போவதாக அது குறிப்பிட்டது. மோசடி, லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு அறவே இடமில்லை என்றும் சீட்ரியம் வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்