சிங்கப்பூரின் மின்கட்டமைப்புக்கு முதல் எரிசக்தித் தொகுப்பை மாற்றிவிட்டது சீட்ரியம்

சிங்கப்பூரின் மின்கட்டமைப்புக்கு முதல் எரிசக்தித் தொகுப்பை மாற்றிவிட்டது சீட்ரியம்

2 mins read
8a9287e7-2ea5-4424-8d7e-f4747923aa9c
உலகின் முதலாவது தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் மிதக்கும் ஆய்வகத்திலிருந்து தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் மாற்றப்பட்டுள்ளது. - படம்: சீட்ரியம்

சிங்கப்பூர், புதிய வழிகளில் எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்க முயன்று வருகிறது. ஆக அண்மையில், உலகின் முதலாவது தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் மிதக்கும் ஆய்வகத்திலிருந்து தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் மாற்றப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள கடலோர, கடல்துறை, எரிசக்தி நிபுணத்துவ நிறுவனமான சீட்ரியம் அந்த முயற்சியை மேற்கொண்டது.

பயனியர் பகுதியில் உள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு அப்பால் அமைந்துள்ள மிதக்கும் ஆய்வகத்திலிருந்து சீட்ரியம் இந்த மின்சார மாற்றத்தைச் செய்தது. எரிசக்தி வளங்களை விநியோகிப்பதற்கான உலகின் முதலாவது தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் மிதக்கும் தளம் இது.

2025ஆம் ஆண்டில் ஆய்வகம் கட்டப்பட்டது. 2020ஆம் ஆண்டு, சீட்ரியம் நிறுவனத்திற்கும் எரிசக்திச் சந்தை ஆணையத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட பங்காளித்துவ உடன்பாட்டின்மூலம் அது சாத்தியமானது.

இந்த மிதக்கும் ஆய்வகம், அந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயலாக்க நிலையத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. இது மிதக்கும் தளத்தில் மனிதவளத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

ஜூலை 3ஆம் தேதி, தளத்திலிருந்து மின்கட்டமைப்புக்கு மின்சாரம் மாற்றிவிடப்பட்டதை எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டான் சீ லெங் நேரடியாகப் பார்வையிட்டார்.

இந்த முதல் மின்சார மாற்றம், எரிசக்தியை விநியோகிக்கக்கூடிய மிதக்கும் தளத்தை சீட்ரியம் வெற்றிகரமாக உருவாக்கியிருப்பதைக் காட்டியிருப்பதாக சீட்ரியம் டிஜிட்டல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் லீ வே லி தெரிவித்தார். நில மின்கட்டமைப்பையும் கடல்துறை எரிசக்தித் தேவைகளையும் ஆதரிக்கக்கூடிய வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) அவர் அந்தத் தகவலை வெளியிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கப்பல்கள் திரவ இயற்கை எரிவாயுவை ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றி, அது மிதக்கும் ஆய்வகத்தை அடையும் வகையில் தளம் செயல்படுகிறது. பின்னர், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக இந்தத் திரவ இயற்கை எரிவாயுவை ஆய்வகத்தின் எரிவாயு இயந்திரங்கள் பயன்படுத்துகின்றன.

திரவ இயற்கை எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாகக் கருதப்படுவதில்லை. ஆயினும், இது குறைந்த அளவில் கரியமிலவாயுவை வெளியிடுவதால் மற்றப் புதைபடிவ எரிபொருள்களைவிடத் தூய்மையானதாகக் கருதப்படுகிறது.

மிதக்கும் ஆய்வகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், சீட்ரியத்தின் பயனியர் தளத்திற்கு மின்சாரம் வழங்கவும் அதன் செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றவும் உதவுகிறது.

உபரி மின்சாரம், சிங்கப்பூரின் மின்கட்டமைப்புக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த உபரி மின்சாரத்தால் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கிட்டத்தட்ட 1,500 நான்கறை வீடுகளின் மாதாந்தர எரிசக்தித் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்று சீட்ரியம் மதிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்