கப்பல் பழுதுபார்ப்பு, மேம்பாடு தொடர்பில் கடல்சார் நிறுவனமான சீட்ரியம், ஆஸ்திரேலியாவின் ‘டீக்கே ஷிப்பிங்’ நிறுவனத்துடன் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.
டீக்கே ஆஸ்திரேலியா என்றழைக்கப்படும் அந்நிறுவனம், ஆஸ்திரேலிய அரசாங்க ஒப்பந்தங்களின்கீழ் கப்பல் இயக்கச் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், புதிய உடன்பாட்டின்கீழ் அந்நிறுவனத்தின் முதல் கப்பல் பழுதுபார்க்கும் பணிகள் சீட்ரியம் நிறுவனத்தின் அட்மிரல்டி பட்டறையில் இம்மாதம் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஓராண்டில் மேலும் ஆறு கப்பல்களைப் பழுதுபார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டீக்கே ஆஸ்திரேலியா நிறுவனத்துடனான அண்மைய உடன்பாடானது, ஆஸ்திரேலியத் தற்காப்பு கடல்துறை ஆதரவுச் சேவைகள் திட்டத்தின்கீழ், கப்பல்களைப் பழுதுபார்த்து, மேம்படுத்துவது தொடர்பிலான தங்களது முதலாவது நீண்டகால உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாடு என்று வியாழக்கிழமையன்று (ஜூலை 11) சீட்ரியம் தெரிவித்தது.
இதன் தொடர்பில் கருத்துரைத்த சீட்ரியம் நிறுவனத்தின் பழுதுபார்ப்பு, மேம்பாட்டிற்கான நிர்வாகத் துணைத் தலைவர் ஆல்வின் கான், “இந்த உடன்பாடானது, கடற்படை, கடல்துறை பாதுகாப்பு சார்ந்த திட்டங்களில் பழுதுபார்ப்பில் எங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, உன்னதமான, பங்காளிகளின் தேவைகளுக்கேற்ற தீர்வுகளை வழங்குவதில் எங்களது அர்ப்பணிப்பையும் காட்டுவதாக அமைந்துள்ளது,” என்றார்.
சீட்ரியத்துடன் இணைந்து செயல்படுவதன்மூலம் தங்களது கப்பல்களின் இயக்கச் செயல்திறனையும் சேவைத்தரத்தையும் மேம்படுத்த இலக்கு கொண்டுள்ளதாக டீக்கே ஆஸ்திரேலியா நிறுவனச் செயல்பாட்டுப் பிரிவின் தலைவர் பீட்டர் லுலியானோ கூறினார்.

