துவாஸ் துறைமுக மறுவடிவமைப்பின் இரண்டாம் கட்டக் கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) துவங்கிவைக்கப்பட்டன.
அடுத்த பத்தாண்டுகளில் துவாஸ் துறைமுகத்தின் கொள்ளளவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பெருந்திட்டத்தில் இப்பகுதியே ஆகப் பெரிய அளவிலானது.
அதில் 400 ஹெக்டர் பரப்பளவு நிலம் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அது கிளமெண்டி வீடமைப்பு வட்டாரத்தின் அளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
வருகின்ற 2028ஆம் ஆண்டிலிருந்து இயங்கவுள்ள துறைமுகத்தின் அப்பகுதி ‘ஃபிங்கர் திரீ’ என்று அழைக்கப்படும். அதில் 23 மீட்டர் ஆளமுள்ள 21 மிகப்பெரிய கப்பல் நிறுத்தங்கள் அமைக்கப்படும்.
2030ஆம் ஆண்டுகளின் மத்தியில் முழுமையடையும் அப்பகுதியில் 8.6 கிலோமீட்டர் நீளமுள்ள தள மேடை அமைக்கப்பட்டு, அங்கு கப்பல்கள் சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் வசதிகள் செய்யப்படும்.
முழுத் துறைமுகமும் 2040ஆம் ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டதும் சிங்கப்பூரின் அனைத்துத் துறைமுக செயல்பாடுகளும் அங்கிருந்தே ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படும்.
அதன்படி, உலகிலேயே முழு அளவில் இயந்திரமயமாக்கப்பட்ட ஆகப்பெரிய துறைமுகமாக துவாஸ் திகழும். ஓர் ஆண்டில் அங்கு 65 மில்லியன் இருபது அடி நீளமுள்ள கொள்கலன்களை (டிஇயு) கையாளக்கூடிய திறனை துவாஸ் துறைமுகம் பெற்றிருக்கும்.
கடல்துறையில் கப்பல் ஏற்றுமதி இறக்குமதி போக்குவரத்தைக் கணக்கிட டிஇயு முறை பயன்படுகிறது.
கட்டுமானத் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், இன்றைய சூழலில் பல கப்பல் நிறுவனங்கள் துவாஸ் துறைமுகத்தையே அதிகமாக விரும்பித் தேர்வு செய்கின்றன என்று கூறினார்.
துவாஸ் துறைமுகத்தின் ஃபிங்கர் திரீ பகுதி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகின் கொள்கலன் கப்பல்களுக்குத் திறம்பட சேவை வழங்கும் வசதிகளை அமைத்துத்தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“நாங்கள் துறைமுகத்தின் வடிவமைப்பை மட்டும் மாற்றவில்லை, நம்மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையையும் மதிப்பையும் ஒருங்கே மேம்படுத்துகிறோம்,” என்று அவரது உரையில் அமைச்சர் தெரிவித்தார்.
கப்பல்கள் கடந்துவந்த வேறு வழிப்பாதைகளில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டாலும் சிங்கப்பூரில் வழங்கப்படும் விரைவான சேவை அதற்கு ஈடுசெய்யமுடியும் என்பதை பல நிறுவனங்கள் அறிந்துள்ளன என்று அவர் பெருமிதம் கொண்டார்.
அதோடு சரக்குகளின் உரிமையாளர்கள் அவற்றை இங்கு கிடத்தி வைத்திருக்கவும், மேல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கவும் இங்கிருந்து வட்டார சந்தைகளுக்கு உடனடியாக விநியோகிக்கவும் சிங்கப்பூர் அதிகமாக உதவுகிறது எனவும் அமைச்சர் விளக்கினார்.
கடந்த 2022ல் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டதிலிருந்து துவாஸ் துறைமுகம் 25 மில்லியன் டிஇயு அளவு கொள்கலன்களை கையாண்டுள்ளது. அங்கு தற்போது 15 ஏற்றுமதி, இறக்குமதி தளங்கள் உள்ளன. அவற்றை 2027ல் 18 ஆக உயர்த்தும் பாதையில் துறைமுகம் திடமாக செயல்படுகிறது.
எவ்வித இயற்கை வளமும் இல்லாது, உணவு, எரிபொருள், விநியோகத் தொடர் என பலவற்றை இறக்குமதி செய்துகொள்ளும் சிங்கப்பூருக்கு கடல்துறையே உயிர்நாடி என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் துறைமுகம் உலக அளவில் 600 நாடுகளின் துறைமுகங்களை இணைக்கிறது. கடல்துறையோடு ஒருங்கிணைந்த உற்பத்தித் துறையின் பொருளியல் உட்பட 140,000 ஊழியர்களுக்கு அது வேலை வழங்குகிறது என்றார் திரு ஜெஃப்ரி.
