தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமய விழிப்புணர்வு மின்னிலக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அறிவிப்பு

3 mins read
f6f97d69-7738-4136-b129-7f485f11f010
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோவும் மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸும் சமய நல்லிணக்க அமைப்புத் தலைவர்களுடன் கலந்துரையாடினர். - படம்: சாவ்பாவ்

‘சிங்கப்பூர்க் குடிமக்களாகிய நாம்’ என்ற மின்னிலக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றத்துடன் (சிடிசி) இணைந்து சமய நல்லிணக்க அமைப்பு (ஐஆர்ஓ) அறிவித்துள்ளது.

‘ஐஆர்ஓ’ அமைப்பு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) ஏற்பாடு செய்திருந்த தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியின்போது இது அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் வலுவான சமய நல்லிணக்கச் சமூகத்தையும் நாட்டின் 60வது பிறந்தநாளையும் கொண்டாடும் நோக்கில் இந்நிகழ்ச்சி இந்து, யூத, ஸொராஷ்ட்ரிய, பௌத்த, தாவோயிச, சமண, கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, பகாய் சமயக்‌ குழுக்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 பேரை ஒன்றிணைத்தது.

இந்த நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவருடன், மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசும் மத்திய சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டெனிஸ் புவாவும் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களுடன் சமய நல்லிணக்க அமைப்புத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் புகைப்படம் எடுத்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களுடன் சமய நல்லிணக்க அமைப்புத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் புகைப்படம் எடுத்துகொண்டனர். - படம்: சாவ்பாவ்

கடந்த 2019ல் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் தொடங்கிவைத்த ‘சிங்கப்பூர்க் குடிமக்களாகிய நாம்’ திட்டம், நாடு முழுவதும் சமயங்களுக்கு இடையிலான புரிதலையும் பரஸ்பர மரியாதையையும் ஊக்குவிக்கும் ஒரு மின்னிலக்க முயற்சியாகும்.

இத்திட்டம், சமூக ஊடகங்கள், இணையம்வழி பல்வேறு சமய நம்பிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேசிய ‘எஸ்ஜிசெக்யூர்’ இயக்கத்தையும் ஆதரிக்கிறது.

குறிப்பாக, இளைய சிங்கப்பூரர்களைச் சென்றடைய நோக்கம் கொண்டுள்ள இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, காணொளிகளும், சிங்கப்பூரின் 10 முக்கிய சமயங்களைப் பற்றிச் சுருக்கமான விளக்கங்களும், சமயங்களைத் தாண்டிய நட்புகளை வெளிப்படுத்தும் தனிப்பட்ட கதைகளும் இணையப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

“மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி), அதன் மின்னிலக்க விழிப்புணர்வு முயற்சிகளை விரிவுபடுத்த ஐஆர்ஓவுடன் இணைந்து செயல்படுவதில் பெருமை கொள்கிறது.

“தொழில்நுட்பத்தின் வாயிலாக, சிங்கப்பூரின் நல்லிணக்கத்துக்கும் வலிமைக்கும் அடிப்படையாக விளங்கும் சமய, பண்பாட்டு வேறுபாடுகளைப் பற்றிய புரிதலையும் அவற்றை மதித்து நடத்தலையும் வலுப்படுத்தலாம்,” என்று திருவாட்டி புவா கூறினார்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, பத்து சமயக்‌ குழுக்களைச் சேர்ந்த தலைவர்களும் மேடையில் வழிபாடு செய்தனர். இதையடுத்து, ஐஆர்ஓ தலைவரும் சிங்கப்பூர் பகாய் இனத்தவரின் ஆன்மிகக் கூட்டத் தலைவருமான கே.இளங்கோவன் உரையாற்றினார்.

“சிங்கப்பூர் உலகின் ஒரு நுண்ணிய அண்டம் (micro-cosm) போன்றது. கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் அருகருகே நிலைத்து நிற்கின்றன.

“நமது சமூக நல்லிணக்கம் தற்செயலாக உருவானது அல்ல. அது, பரஸ்பர மரியாதை, தொடர்ச்சியான முயற்சி, அமைதியாக ஒன்றிணைந்து வாழ்வதற்கான பகிர்ந்த உறுதிப்பாட்டின் பலனாகக் கட்டியெழுப்பப்பட்டது,” என்று அவர் கூறினார். மேலும், அதே அடிப்படையில்தான் ஐஆர்ஓவும் தனது நோக்கத்தைக் கண்டறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த 60 ஆண்டுகளில் ஐஆர்ஓ தொடர்ந்து எதிர்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டி, புதிய உறவுகளை உருவாக்கி, ஒவ்வொரு சமயத்தின் ஞானத்தையும் பகிரும் என்றும் திரு இளங்கோவன் தெரிவித்தார்.

சிங்கப்பூர் போன்ற பன்முகத்தன்மை நிறைந்த, மக்கள் நெருக்கமாக வாழும் சமூகத்தில், ஒருவரையொருவர் புரிந்துகொள்வது மிக அவசியம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் திரு ராஜன் கிருஷ்ணன் கூறினார்.

நிகழ்ச்சியில் இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் திரு ராஜன் கிருஷ்ணன் (நடுவில்) கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் திரு ராஜன் கிருஷ்ணன் (நடுவில்) கலந்துகொண்டார். - படம்: பெரித்தா ஹரியான்

“தேசிய தினம் என்பது இன, சமய எல்லைகளைத் தாண்டி அனைவரையும் இணைக்கும் சின்னம். பத்து முக்கியச் சமயங்களை ஒருங்கிணைக்கும் ஐஆர்ஓ, நீண்ட காலமாக நட்பையும் ஒற்றுமையையும் வளர்த்துவரும் சிறந்த தளம்,” என்றார் அவர்.

சமயம், இனம் எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் மனிதர்கள் என்பதே அடிப்படை உண்மை என்பதைத் திரு ராஜன் வலியுறுத்தினார்.

“ஒருவரை ஒருவர் புரிந்து மதித்து நடந்துகொள்ளும்போது, நமது விழுமியங்கள், கோட்பாடுகள், நன்னெறிகள் ஒன்றே என்பதை உணர முடிகிறது. மகிழ்ச்சியோ துயரமோ எதுவானாலும், ஒன்றிணைந்து நிற்கும் வலிமையை இந்தப் புரிதலே உருவாக்குகிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் சமயங்களுக்கு இடையேயான உறவை ஆழப்படுத்தும் சிறந்த வாய்ப்பு,” என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஐஆர்ஓ முன்னாள் தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு வழிபாட்டில் அனைவரும் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்