ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள மூன்று முக்கிய மருத்துவமனைகளின் கழிவறைகள், குளியலறைகளில் நூற்றுக்கணக்கான சக ஊழியர்களை ரகசியமாக காணொளி எடுத்த வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவரான 28 வயது ராயன் சோ குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மெல்பர்ன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, இடைவிடாமல் பின்தொடர்வது மற்றும் ரகசியமாகத் தனிப்பட்ட படங்களைப் பதிவு செய்தது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார். 2021 முதல் 2025 வரை அங்குள்ள ஆஸ்டின் மருத்துவமனை, ராயல் மெல்பர்ன் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்தபோது இந்தச் செயல்களில் அவர் ஈடுபட்டார்.
அவரது வீட்டிலிருந்து மடிக்கணினி, ‘ஹார்ட் டிஸ்க்’ மற்றும் கைப்பேசி போன்ற மின்னணுச் சாதனங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றில் 500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் 10,000க்கும் அதிகமான ரகசிய காணொளிகள், புகைப்படங்கள் கண்டறியப்பட்டன.
முன்னதாக, ஆஸ்டின் மருத்துவமனையின் ஊழியர்களுக்கான கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி ஒன்றைக் கண்டறிந்த ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சோ கைது செய்யப்பட்டு, அவரது மருத்துவ உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
தற்போது கடுமையான பிணை நிபந்தனைகளின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ள சோவுக்கு, வரும் நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று மெல்பர்ன் கவுண்டி நீதிமன்றத்தில் தண்டனை விவரங்கள் குறித்த விசாரணை தொடங்கவுள்ளது.
இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பணியிடத்தில் பாலியல் தொல்லை மற்றும் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 100 ஊழியர்கள் அந்த மருத்துவமனைகளுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

