ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் பகுதியில் எண்ணெய்த் திட்டுகள் தென்பட்டதை அடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அப்பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாகத் தேசிய சுற்றுப்புற வாரியம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) தெரிவித்துள்ளது.
பூங்காவின் ‘பகுதி டி’ கடற்கரைப் பிரிவில் எண்ணெய்த் திட்டுகள் காணப்பட்டன.
சிக்லாப் பூங்கா இணைப்புப் பாதை, சிக்லாப் லிங்க் அருகே, விக்டோரியா தொடக்கக் கல்லூரி, விக்டோரியா பள்ளிக்கு அண்மையில் உள்ள கடற்கரைப் பகுதியே இதுவென அறியப்படுகிறது.
எண்ணெய் திட்டுகளை அகற்றும் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பொதுமக்கள் கடலில் நீந்தவோ அல்லது நீர் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம் என்று வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடற்கரையில் எச்சரிக்கைப் பலகைகளும் வாய்க்கால்களில் மிதக்கும் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) மாலை வேளையில் எண்ணெய் கரை ஒதுங்கியதாகத் தெரிவித்த சிங்கப்பூர் கடல் துறை, துறைமுக ஆணையம், அதன் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
சனிக்கிழமை காலையில் நடத்தப்பட்ட வான்வழி ஆய்வில் கடற்பகுதியில் எண்ணெய் கசிவு ஏதும் தென்படவில்லை என்றும் வனவிலங்குகளுக்குப் பாதிப்பில்லை என்றும் அறியப்படுகிறது.
எனினும், கந்தக அளவு குறைந்த இத்தகைய எண்ணெய்ப் படலங்கள் தோல் அரிப்பு, கண் எரிச்சல், சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறும் வேளையில், பொதுமக்களின் புரிதலையும் பொறுமையையும் எதிர்பார்ப்பதாக வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
