சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பகுதி-மின்கடத்திகளுக்கான தீர்வைகள் குறித்த பேச்சு ஆரம்ப நிலையில் இருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார். உலக வர்த்தகச் சூழல் உருமாறிவரும் நிலையில் அனைத்துத் தரப்பினரையும் ஈடுபடுத்தும் ஆசியானின் முனைப்பை அவர் மறுஉறுதிப்படுத்தினார்.
“துறைவாரியான தீர்வைகளை அமெரிக்கா எவ்வாறு விதிக்கத் திட்டமிட்டுள்ளது என்பது இப்போது அவ்வளவு தெளிவாக இல்லை. மருந்தாக்கத் துறையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்,” என்று திரு வோங் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) தெரிவித்தார்.
குறிப்பிட்ட மருந்துப்பொருள்களுக்கு 100 விழுக்காட்டுத் தீர்வை விதிக்கப்படும் என்று வாஷிங்டன் கூறியிருந்தது. ஆனால் அது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. பகுதி-மின்கடத்திகளைப் பொறுத்தவரை, அமெரிக்கா இன்னும் அதன் தீர்வைகளை அறிவிக்கவில்லை.
கோலாலம்பூரில் ஆசியான் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்தித்தபோது தீர்வைகள் குறித்துப் பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குத் திரு வோங் பதில் தந்தார்.
தலைவர்களின் கூட்டங்களில் தீர்வைகள் குறித்து விரிவாகப் பேசப்படவில்லை என்றார் அவர். ஆனால் அமெரிக்காவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்புப் பேச்சுகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.
திரு டிரம்ப்புடனான பேச்சு, பரந்துபட்ட அடிப்படையில் ஆசியான் நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவைப் பற்றி அமைந்திருந்ததாகப் பிரதமர் சொன்னார்.
உறவைத் தொடர்ந்து வலுவாய் வைத்திருக்க அமெரிக்காவும் ஆசியானும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உச்சநிலை மாநாட்டில் அமெரிக்காவுக்கும் ஆசியானில் அங்கம் வகிக்கும் மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கும் இடையில் இருவழித் தீர்வை உடன்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் ஏன் அத்தகைய உடன்பாட்டை அமெரிக்காவுடன் செய்துகொள்ளவில்லை என்று சிலர் தம்மிடம் கேட்டதாகத் திரு வோங் கூறினார்.
அதற்கு அவர், ஏற்கெனவே வாஷிங்டனுடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொண்டிருப்பதால் சிங்கப்பூர் அவ்வாறு செய்யவில்லை என்று விளக்கம் தந்தார்.
“சிங்கப்பூருக்கு அடிப்படைத் தீர்வையான 10 விழுக்காடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கும் குறைவாக அமெரிக்கா தீர்வையைக் குறைக்கப்போவதில்லை. அதனால் அத்தகைய உடன்பாடுகள் குறித்துப் பேசவில்லை,” என்றார் பிரதமர் வோங்.

