வணிக ஒப்பந்தக் கடப்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும்

இந்தோனீசியாவின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி குறைக்கப்பட்டது பற்றி பிரதமர் வோங்

வணிக ஒப்பந்தக் கடப்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும்

படம்: பே கார்த்திகேயன்

25 Oct 2026 - 7:50 pm

3 mins read

சிங்கப்பூரின் எரிசக்தித் தேவையை எதிர்நோக்கி திட்டமிடுவது அரசாங்கத்தின் முன்னுரிமை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். இந்தப் பொறுப்பு தற்போது எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சின்கீழ், அமைச்சர் டான் சீ லெங் மேற்பார்வையில் உள்ளது.

“அவர் இந்தப் பணிக்காக முழு உற்சாகத்துடன் இருக்கிறார் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்ற மக்கள் செயல் கட்சியின் மாநாட்டில் பேசிய பிரதமர், சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் இன்றியமையாத எரிசக்திப் பாதுகாப்பில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

அண்டை நாடான இந்தோனீசியாவின் இயற்கை எரிவாயு ஏற்றுமதிக் குறைப்பு நடவடிக்கைக்கு மத்தியில், வணிக ஒப்பந்தங்கள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் எனவும் திரு வோங் வலியுறுத்தினார். 

நிதி அமைச்சருமான திரு வோங், தற்போது நாட்டின் பெரும்பகுதி மின்னுற்பத்தி, இயற்கை எரிவாயுவைச் சார்ந்துள்ள சூழலில், எதிர்கால ஆற்றல் தேவைகளைத் தடையின்றிப் பூர்த்திசெய்ய அணுசக்தி உள்ளிட்ட மாற்று தூய எரிசக்தி வாய்ப்புகளை ஆராய்வதில் சிங்கப்பூர் தயங்காது என்று கூறினார்.

அண்மையில் இந்தோனீசியா சிங்கப்பூருக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதியை குறைப்பதாக அறிவித்துள்ளதைச் சுட்டிய திரு வோங், சிங்கப்பூரின் தற்போதைய எரிசக்தி எதார்த்தத்தையும் வரவிருக்கும் சவால்களையும் விரிவாக எடுத்துரைத்தார். 

“நாட்டின் மின்னுற்பத்தியின் பெரும்பகுதி, இயற்கை எரிவாயு மூலமே பெறப்படுகிறது. இதில் கணிசமான பங்கை இந்தோனீசியாவிலிருந்து குழாய்கள் வாயிலாக இறக்குமதி செய்கிறோம். 

“ஆனால், சிங்கப்பூருக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதி குறைக்கப்படுவதாக இந்தோனீசியா அறிவித்துள்ளது. எரிவாயு விநியோகம் முறையான வணிக ஒப்பந்தங்களின்கீழ் பிணைக்கப்பட்டுள்ளது.

“சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களின் உறுதிமொழிகளை முறையாக மதிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அதேவேளையில், ஒப்பந்தங்களின்கீழ் தனக்குள்ள உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க சிங்கப்பூரின் எரிவாயு இறக்குமதி நிறுவனம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்,” என்று பிரதமர் தெரிவித்தார்.

இத்தகைய விநியோகத் தடைகளை எதிர்கொள்ள சிங்கப்பூர் நீண்டகாலமாகவே திட்டமிட்டுத் தயாராகி வந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட அவர், குழாய்வழி விநியோகத்தை மட்டுமே சார்ந்திருக்காமல், பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் இயற்கை எரிவாயுவை நேரடியாகக் கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்ய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையங்களில் முதலீடு செய்துள்ளதையும் நினைவுகூர்ந்தார்.

இது எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறுகளையும் சமாளிக்க நாட்டிற்குக் கூடுதல் விருப்பங்களை வழங்குகிறது என்று விவரித்த திரு வோங், இயற்கை எரிவாயுவை மட்டும் நம்பியிருக்க முடியாது என்றும் 24 மணி நேரமும் நம்பகமான மின்சாரத்தை வழங்கக்கூடிய தூய்மையான மின்சார ஆதாரங்கள் தேவை என்றும் கூறினார்.

“இதனால்தான் அணுசக்தியின் சாத்தியத்தை நாம் ஆராய்ந்து வருகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளில் அணுசக்தி குறித்த பாதுகாப்பு அச்சம் இருப்பது இயல்பே. ஆயினும், மக்கள் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

“ஆனால், கடினமானது, சர்ச்சைக்குரியது என்பதற்காக எந்தவொரு வாய்ப்பையும் நாம் ஒதுக்கிவிட முடியாது. இடர்களையும் இழப்பீடுகளையும் முறையாக எடைபோட்டு, மக்களோடு கலந்துரையாடி நாட்டின் எதிர்கால நலனுக்கேற்ற சரியான முடிவை நாங்கள் எடுப்போம்,” என்றார் திரு வோங்.

பாதுகாப்பு அரண்கள் வலுப்படுத்தப்படும்

இதற்கிடையே, மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் டான் சீ லெங், இவ்விவகாரம் குறித்து விளக்கமளித்தார்.

உள்ளூர் எரிவாயு இறக்குமதி நிறுவனமான ‘கேஸ் சப்ளை’ நிறுவனம் தனது விநியோகஸ்தர்களுடன் கலந்தாலோசித்து ஒப்பந்த மீறல் உள்ளதா என்பதைக் கண்டறியும். தேவைப்பட்டால் வணிக ரீதியான தீர்வுகளை நாடும்,” என்று அவர் கூறினார்.

ஒப்பந்த மீறல் குறித்து கண்டறிய எவ்வளவு காலமாகும் என்ற கேள்விக்கு, “வணிக ஒப்பந்தங்களில் உள்ள தீர்வுகளை நெருக்கமாக ஆராய்வதை அந்நிறுவனத்திடம் விட்டுவிடுகிறேன்,” என்று கூறிய அமைச்சர், எரிசக்திச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் நாட்டின் இயல்பு வாழ்க்கையையோ பொருளியலையோ பாதிக்காத வகையில், பாதுகாப்பு அரண்களை அரசு தொடர்ந்து பலப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
எரிவாயுஇயற்கை எரிவாயுசிங்கப்பூர்எரிசக்தி