கள்ள சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்க மூத்த பாதுகாவல் அதிகாரி ஒருவர் குறைந்தது 4,750 வெள்ளியைக் கையூட்டாகப் பெற்றார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அவர், அத்தொகையைக் கப்பல் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களிடமிருந்து 32 தருணங்களில் பெற்றதாக நம்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட அந்நிறுவன ஊழியர்களுக்கு, கள்ள சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கொண்டுவரும் கும்பலுடன் தொடர்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
செவ்ரோன் பெஞ்சூரு முனையத்தில் (Chevron Penjuru Terminal) உள்ள சோதனைச்சாவடிவழி கள்ள சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கொண்டுவர அனுமதி வழங்குவதற்கு அகமது காமிஸ் என்ற சந்தேக நபர் கையூட்டு பெற்றுக்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஒன்றில் இத்தகவலை வெளியிட்டது.
அந்தக் காலகட்டத்தில் அகமது, பிக்கோ கார்ட்ஸ் (Pico Guards) நிறுவனத்துக்கு வேலை செய்து வந்தார். 64 வயதாகும் அவர், 2019லிருந்து 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அக்குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
அப்துல் ரகுமான் வஹாப், வடிவேலு தர்மன், தெக்கு ராஜா சுரேஷ், ரொஸ்லான் செலாமாட், ஆகியோரிடமிருந்து அகமது, லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது. அந்நபர்கள் அந்தக் காலகட்டத்தில் எங் ஹப் ஷிப்பிங் (Eng Hup Shipping) கப்பல் நிறுவனத்துக்கு வேலை செய்தனர்.
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட ‘பகி’ (buggy) வாகனத்தை, ஜாலான் புரோவில் உள்ள எரிபொருள் நிறுவனமாகிய செவ்ரோன் சிங்கப்பூர் அமைப்புக்குச் சொந்தமான பகுதியில் சோதனைச்சாவடியைக் கடக்க ரொஸ்லானுக்கும் முகம்மது சாலே என்பவருக்கும், அகமது தெரிந்தே உதவியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அச்சம்பவம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதியன்று அதிகாலை மூன்று மணிக்கு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமது மீது வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 22) சட்டவிரோதமான முறையில் பணம் பெற்றதன் தொடர்பில் 13 குற்றச்சாட்டுகளும் சுங்கத்துறைச் சட்டத்தின்கீழ் இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. சுங்கத்துறைச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், கள்ள சிகரெட்டுகள் தொடர்பிலானவை.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று அவர் குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விவகாரத்தில் ரோஸ்லான், தெக்கு ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதில் சம்பந்தப்பட்ட மற்ற சந்தேக நபர்களின் வழக்குகளைப் பற்றி நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.