விமான நிலையத்தில் துப்பாக்கியால் தவறுதலாகச் சுட்ட உதவிப் பாதுகாவல் அதிகாரிக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட 39 வயது முகமது முக்லிஸ் காமிஸ், விளையாட்டாகத் தோட்டா ஒன்றைத் துப்பாக்கியில் போட்டு தவறுதலாகச் சுட்டதில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு அருகில் இருந்த சக ஊழியருக்குக் காயம் ஏற்படவில்லை.
சேட்ஸ் பாதுகாப்புச் சேவைகளில் முக்லிஸ் உதவிப் பாதுகாவல் அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். அவர் சரக்கைக் கையாளும் பிரிவில் சார்ஜண்ட் பதவி வகித்தார். அவர் ஐந்தாண்டு ஆயுதப் பிரிவில் சேவையாற்றியதை அடுத்து 2023 நவம்பரில் சம்பவம் நடந்தது.
நவம்பர் 22, காலை, சிங்கப்பூர் ஆகாயச் சரக்கு முனையக் கட்டடத்தின் சேட்ஸ் உதவிப் பாதுகாவல் ஆயுதப் பிரிவில் முக்லிஸ் இருந்தார். அப்போது சுல்கர்னாயின் ரம்லி என்ற மற்ற அதிகாரி தமது ஆயுதத்தை எடுக்க சென்றார்.
சுல்கர்னாயினுக்கு மொத்தம் 10 தோட்டாக்கள் கொடுக்கப்படவேண்டும். ஆனால் முக்லிஸ் அவருக்கு 9 தோட்டாக்களை மட்டும் கொடுத்தார். ஒரு தோட்டா குறைவாக இருக்கிறது என்று சுல்கர்னாயின் சொன்னதை அடுத்து முக்லிஸ் மேசையின்கீழ் இருந்த தோட்டாவை எடுத்து வானில் வீசிக் கையில் பிடித்தார்.
பின் தோட்டாவை துப்பாக்கியில் போட்டு விளையாட்டாக முக்லிஸ் சுட்டார். சம்பவத்தை அடுத்து மேலதிகாரிகளிடம் நடந்ததை சொன்ன முக்லிஸ் பின் கைதுசெய்யப்பட்டார்.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எந்தப் பொருள் சேதமும் ஏற்படவில்லை. அதையடுத்து வேலையிலிருந்து முக்லிஸ் நீக்கப்பட்டார்.

