பாதுகாவல் அதிகாரி ஒருவரைப் பலிவாங்கிய விபத்தில் ஈடுபட்ட டாக்சி ஓட்டுநருக்கு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியான ரஹ்மட் முகம்மது டாவுட், 68, அக்கறையின்றி கவனமில்லாமல் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை வெள்ளிக்கிழமை (ஜூன் 6) ஒப்புக்கொண்டார்.
அவர், காரின் ‘பிரேக்’கை அழுத்துவதற்குப் பதில் தவறுதலாக காரை வேகமாகச் செல்ல வைக்கும் ஆக்சலேரேட்டரை அழுத்தியதால் கார், முகப்பு ஒன்றுக்குப் பின்னால் அமர்ந்திருந்த 75 வயது மூத்த பாதுகாவல் அதிகாரி மீது மோதியது.
அந்தப் பெண் பாதுகாவல் அதிகாரியின் ஒரு கால் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிரிழந்தது மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
ரஹ்மாட்டுக்கு வாகனம் ஓட்ட எட்டு ஆண்டுத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் அத்தடை நடப்புக்கு வரும்.
பாதுகாவல் அதிகாரி மோதப்பட்ட சம்பவம் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் தேதி மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் எமிலி கோ தெரிவித்தார். அச்சம்பவம், ராபர்ட்சன் கீயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நிகழ்ந்தது.

