சிலேத்தார் விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) காலை போக்குவரத்து பரபரப்பாக இருந்த நேரத்தில் ஒரு காருக்கும் மூன்று மோட்டார் சைக்கிள்களுக்கும் இடையே விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் நால்வர் காயமுற்றனர். அவர்களில் சுயநினைவிழந்த நிலையில் ஒருவரும் எஞ்சிய மூவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
உட்லண்ட்ஸ் அவென்யூ 12ல் வெளியேறும் சாலைக்கு அருகே மத்திய விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச் சாலையில் விபத்து நடந்தது. அது குறித்து அன்றையதினம் காலை 7.50 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் கூட்டாக ஊடகத்திடம் அறிக்கை வெளியிட்டன.
இரண்டு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள், அவற்றில் ஒன்றின் பின்னிருக்கையில் பயணம் செய்த ஒருவர் ஆகிய 24 முதல் 31 வயதுடைய மூவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்றொரு 58 வயது மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
பத்து ஆண்டுகளில் இல்லாத அளவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சிங்கப்பூரில் ஏற்றம் கண்டுள்ளது. 2016ல் 141 மரணங்கள் ஏற்பட்டிருந்தன. 2025ல் அது 149 என்று உயர்ந்துள்ளது.
அதேவேளையில் சாலை விபத்துகளில் காயமுற்றோரின் எண்ணிக்கையும் 2024ல் இருந்த 9,342 என்ற எண்ணிக்கையில் இருந்து 2025ஆம் ஆண்டில் 9,955 என்று ஏற்றமடைந்துள்ளது.


