வரும் 2026 நடுப்பகுதி முதல் ஆறு தானியக்கப் பேருந்துகள் மரினா பே, ஷென்டன் வே, ஒன் நார்த் வர்த்தகப் பூங்கா ஆகிய இடங்களுக்குப் பொதுப் பேருந்துச் சேவை உள்ள பாதைகளில் தானியக்கப் பேருந்துகளின் சோதனை ஓட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தானியக்கப் பொதுப் பேருந்துச் சேவை சோதனை முயற்சியில் நிலப் போக்குவரத்து ஆணையம் முதன்முறையாக இறங்கியுள்ளது.
தானியக்கப் பொதுப் பேருந்துகளை இயக்கும் திட்டம் தொடர்பில் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்குமாறு நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (ஜனவரி 27) கோரிக்கை விடுத்தது. அத்தகைய பேருந்துச் சேவையை வழங்குவது, அத்தகைய பேருந்துகளை எந்த எண்ணிக்கையில் செயல்படுத்துவது போன்றவை தொடர்பான தேவைகளை ஆராய அந்நடவடிக்கை உதவும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது.
முதல் ஆறு தானியக்கப் பேருந்துகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து ஓட்டுநர்கள் இயக்கும் பேருந்துகளுடன் சேர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என்று ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. முதலில் மூவாண்டுகளுக்கு தானியக்கப் பேருந்துகள் சோதனையிடப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
முதல்முறையாக மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனையில் முதலில் குறைந்தது 16 இருக்கைகளாவது இருக்கும் சிறிய பேருந்துகள் இடம்பெறும். அவை இரண்டு பாதைகளில் சோதனையிடப்படும்.
பேருந்துச் சேவை 400 மரினா பே, ஷென்டன் வே பகுதிகளில் சேவை வழங்கும். மரினா பே உல்லாசக் கப்பல் நிலையம், கரையோரப் பூந்தோட்டம், ஷென்டன் வே வட்டாரம், டெளன்டவுன் பாதை பெருவிரைவு ரயில் நிலையங்கள் உள்ள இடங்கள் ஆகியவற்றில் அப்பேருந்து நிறுத்தங்கள் அமைந்திருக்கும்.
பேருந்துச் சேவை 191, ஒன் நார்த் வட்டாரத்தில் சேவை வழங்கும். ஒன் நார்த், புவன விஸ்டா பெருவிரைவு ரயில் நிலையங்கள், புவன விஸ்டா பேருந்து முனையம் ஆகியவற்றில் அதன் நிறுத்தங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையை விரிவுபடுத்த மேலும் 14 பேருந்துகள் வரை வாங்கப்படக்கூடும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.