தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்வியில் மேன்மை பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி ஊக்குவிப்பு

3 mins read
9ed5f49d-ce3c-463c-bedd-400cb9942a0e
தலைசிறந்த மாணவர் விருதுகள் வென்ற மாணவர்களுடன் கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், சுய உதவிக் குழுத் தலைவர்கள். - படம்: மெண்டாக்கி

கல்வியில் மேன்மையடைந்த 1,520 வசதி குறைந்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கி ஊக்குவித்தது ‘சுய உதவிக் குழுக்கள் துணைப்பாடக் கல்வி விருதுகள் 2024’.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) நடந்த இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கலந்துகொண்டார்.

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு, பொதுக்கல்விச் சான்றிதழ் வழக்கநிலை, சாதாரண நிலைத் தேர்வுகளில் சிறப்பாகச் செய்த கூட்டுத் துணைப்பாடத் திட்ட (Collaborative Tuition Programme) மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வருடாந்தர நிகழ்வு 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது

இவ்வாண்டு அனைத்து சுய உதவிக் குழுக்களும் தகுதி அளவுகோல்களை தரப்படுத்த (standardisation of eligibility criteria) ஒப்புக்கொண்டன.

இதன்படி, தேசியத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, சென்ற ஆண்டு பள்ளி ஆண்டிறுதித் தேர்வுகளோடு ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் ஒரு தரநிலை (grade) மேம்பட்டுள்ள மாணவர்கள் இவ்விருதுக்குத் தகுதிபெற்றனர்.

இவ்வாண்டு விருதுகள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 72 விழுக்காடு, அதாவது, 883லிருந்து 1,520க்கு அதிகரித்தது.

“சென்ற ஆண்டைவிட ஏறத்தாழ 20 விழுக்காடு அதிகமாக, இவ்வாண்டு 340 இந்தியர்கள் இவ்விருதைப் பெறுகின்றனர். அனைத்து இனத்தவருக்கும் பொதுவாக வகுக்கப்பட்ட அளவுகோலில் இந்தியர்கள் சிறப்பாகச் செயல்படுவது பாராட்டத்தக்கது,” என்றார் சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன்.

18 தலைசிறந்த மாணவர் விருதுகளும் வழங்கப்பட்டன. அவர்களில் ஒருவர், எட்டு ஆண்டுகளாக சிண்டாவின் ‘ஸ்டெப்’ திட்டத்தில் பங்கேற்ற சாதாரண நிலை மாணவர் முகம்மது ஹாசிஃப், 17.

“நான் தொடக்கப்பள்ளியில் நன்றாகப் படித்தேன். ஆனால், உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுத்தனம் அதிகரித்து, கல்வியில் கவனம் செலுத்தவில்லை. என் உயர்நிலை நான்கு முன்னோட்டத் தேர்வு முடிவுகளைக் (பிரிலிம்ஸ்) கண்டபோதுதான் விழிப்படைந்து, கடினமாகப் படிக்கத் தொடங்கினேன்,” என்றார் ஹாசிஃப்.

“முன்பு நான் கல்வியில் நிறைய சிரமப்படுவேன். ஈராண்டுகளாக சிண்டா ‘ஸ்டெப்’ வழி நான் பயனடைந்துள்ளேன். சக மாணவர்களுடனான போட்டித்தன்மை என்னை மேலும் சிறக்கத் தூண்டியது,” என்றார் வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) தலைசிறந்த மாணவர் முகம்மது ஹாரிஸ், 17.

“நான் பள்ளிப் பாடங்கள், தேர்வுக்கான பயிற்சி, ஆரோக்கிய வாழ்க்கைமுறை மூன்றையும் சரிசமமாகக் கையாளவேண்டியிருந்தது,” என்றார் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற தலைசிறந்த மாணவர் சதீஷ் குமார் கரிஷ்மா, 13.

“நான் கணிதம், அறிவியலில் பின்தங்கினேன். கேள்விகளுக்குப் படிப்படியாகத் தீர்வுகாண்பதில் சிண்டா ஆசிரியர்கள் எனக்கு உதவினர்,” என்றார் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற (அடிப்படை) தலைசிறந்த மாணவர் ஸ்ரீ வேஸ்வர் குமரன், 14.

“அனைத்து இன மாணவர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் கல்விப் பயிற்சி வழங்கும் இத்திட்டம், 2002ல் 11 நிலையங்களுடன் தொடங்கி இன்று 212 நிலையங்களுடன் விரிவடைந்துள்ளது. இதன்வழி 178,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்,” என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.

இவ்வாண்டு 340 இந்தியர்கள் இவ்விருதைப் பெறுகின்றனர். அனைத்து இனத்தாருக்கும் பொதுவாக வகுக்கப்பட்ட அளவுகோலில் இந்தியர்கள் சிறப்பாகச் செயல்படுவது பாராட்டத்தக்கது.
சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன்

இவ்வாண்டு விருதுகளின் மதிப்பு உயர்த்தப்பட்டது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்பு 100 வெள்ளி மதிப்பிலான ‘பாப்புலர்’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன; ஆனால், இம்முறை 150 வெள்ளி ரொக்கம் வழங்கப்பட்டது.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முன்பு 150 வெள்ளி ‘பாப்புலர்’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், இம்முறை 200 வெள்ளி ரொக்கம் வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்