அலங்காரம், ஒளியூட்டு, விருந்து என உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திரு பால்சன் காலேப், 52, மியன்மாரில் உள்ள தமிழ்ச் சமூகத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் விதைக்க அயராது சேவையாற்றி வருகிறார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் மியன்மாரைத் தாக்கிய நர்கீஸ் சூறாவளி ஏராளமானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. சிங்கப்பூரில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த திரு பால்சனின் வாழ்க்கையும் அந்த ஆண்டிலிருந்து மாறத் தொடங்கியது.
“இங்குத் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக ஜெர்மன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். இயற்கைப் பேரிடரால் உருக்குலைந்த மியன்மாரை 2008ஆம் ஆண்டு பார்க்க நேரிட்டது.
“அங்குள்ள புலம்பெயர் இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களின் நிலை என் மனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, சமூக சேவை நோக்கிய எனது வாஞ்சை அத்தருணத்திலிருந்து வேகமெடுத்தது,” என்று நினைவுகூர்ந்தார் திரு பால்சன்.
“ஒரே தாய்மொழி என்பதால் அங்குள்ள கிராமப்புறங்களுக்குப் போவதும், அங்குள்ள தமிழ்ச் சமூகத்தினரைச் சென்றடைவதும், சிறார்கள் படிக்க உதவுவதும் எளிதாக இருந்தது.
“நண்பர்கள் சிலரோடு இணைந்து இலவச பாட வகுப்புகளில் தொடங்கிய சமூகப் பணி, பிறகு பெரியோர், இளையர்களுக்கான தையற்கலை, ஆங்கிலம், கணினி வகுப்புகள் என விரிவடைய, நாளடைவில் உள்ளூர் மக்கள் எங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர்,” என்று மியன்மார் சமூக சேவையின் ஆரம்ப நாள்களை விவரித்தார் திரு பால்சன்.
தேவையுள்ளவர்களுக்கு உதவுவதில் பேரார்வம் கொண்டிருந்ததால் சிங்கப்பூரில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, முழுநேரமாக மியன்மார் தமிழ்ச் சமூகத்திற்குச் சேவையாற்ற முடிவெடுத்தார் திரு பால்சன்.
“நான் வேலை செய்து வந்த நிறுவன முதலாளியும் சில நண்பர்களும் இங்கிருந்து கொண்டே அவர்களுக்கு ஏதாவது உதவலாமே என்று கேட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“வசதி குறைந்தோருக்கு நாளும் உதவுவதைக் காட்டிலும் அவர்கள் வாழ்வைச் சீராக்கி, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களைத் திறனாளர்களாக மேம்படுத்துவதே என் இலக்கு, என்று முடிவு செய்தவனாய் மியன்மாரை நோக்கி பயணம் செய்தேன்,” என்று திரு பால்சன் நினைவுகூர்ந்தார்.
உதவிகளை அவ்வப்போது செய்து வந்த காலம் மாறி கடந்த பத்து ஆண்டுகளாக மியன்மாரில் யங்கூன், பாகோ (Bago), மூலமியைன் (Mawlamyine) ஆகிய இடங்களில் கல்வி, நிதி, மருத்துவம் சார்ந்த உதவிகளை வழங்குவது என முழுமூச்சாக பல்வேறு சமூகப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
உள்ளூர்வாசிகள் ஆதரவு
நண்பர்களோடு இணைந்து, சிற்றூர் ஒன்றைத் தத்தெடுத்து சிறிய அளவிலான சேவைகள் வழங்கிக் கொண்டிருந்த திரு பால்சன்னிற்கு நாளடைவில் மியன்மார் மக்கள், சமயத் தலைவர்கள் எனப் பலரும் தங்கள் ஆதரவை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால், தற்போது பெனியேல் சேவை அமைப்பைத் துவங்கி, அதன்வழி எண்ணற்ற நற்பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க உலகம் முழுதும் இன்பம், சமாதானம், நம்பிக்கையளிப்பதே கிறிஸ்துமஸ் நற்செய்தி.
“ஆண்டு முழுதும் செய்யப்படும் சேவைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்த பண்டிகைக் காலகட்டத்தில் மொழி, இனம், சமயம் கடந்து ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மியன்மார் மக்களைச் சென்றடைய எண்ணற்ற நிகழ்ச்சிகள் டிசம்பர் மாதம் முழுவதும் நடத்துகிறோம்.
“இங்கு சராசரியாக ஒரு குடும்பத்தில் மூன்று முதல் நான்கு பிள்ளைகள் இருப்பார்கள். எனவே அப்பிள்ளைகளுக்குப் புத்தாடை, அவர்கள் குடும்பத்தினருக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்கள், அன்பின் விருந்து ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்வோம். இறைவன் கற்பித்த எளிமை, அன்பு. இரக்கம் ஆகியவற்றை இச்செயல்களில் வெளிபடுத்துவோம்,” என்றார் திரு. பால்சன்.
‘வெகுவிரைவில் சமாதானம் மலரும்’
“நமக்கு இறைவன் அருளிய எல்லா நன்மைகளையும் அன்பையும் பகிர்ந்து கொடுக்கும் நன்னாள்தான் கிறிஸ்துமஸ். அதைத்தான் இப்போது செய்து வருகிறோம். ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இணைந்து இயன்ற அளவில் மியன்மார் தமிழ் மக்களுக்காகச் சேவையாற்றி, இத்தகைய பண்டிகைக் காலங்களை அவர்கள் மறக்க முடியாத நன்னாளாகக் கருதிடும் வகையில் பல்வேறு உதவிகளைச் செய்கிறோம்,” என்ற இந்தச் சேவகர், அம்மக்களிடம் தமக்குப் பிடித்த பண்பு குறித்தும் பேசினார்.
“மியன்மார் மக்களுக்குப் பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். குறைவாக இருந்தாலும் நிறைவாக வாழவிரும்பும் மனப்பாங்கை அவர்களிடையே காணமுடியும். அவர்களது அந்தப் பண்பைப் பார்த்து வியந்திருக்கிறேன்,” என்ற திரு பால்சன், அவர்களுக்கான கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
“அங்கு நிலவும் தற்போதைய சூழல் நிச்சயம் மாறும். மியன்மார் மக்களுக்கான சமாதான வாழ்வு வெகுதொலைவில் இல்லை என்கிற நம்பிக்கையின் செய்தியே அவர்களுக்கு நான் கூற விரும்பும் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி,” என்று நிறைவு செய்தார் திரு பால்சன்.