செம்பவாங் கப்பல் பட்டறையை மறுசீரமைப்பது தொடர்பாக தனியார் துறையுடன் நகர மறுசீரமைப்பு ஆணையம் (யூஆர்ஏ) இணைந்து செயல்படுகிறது.
செம்பவாங் கப்பல் பட்டறையில் எதிர்காலக் கடலோர வட்டாரம் ஒன்றை வடிவமைக்க தனியார் துறையைச் சேர்ந்த திட்டமிடல் நிபுணர்கள், கட்டடக்கலை நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறும் முயற்சியில் ஆணையம் இறங்கியுள்ளது.
இத்திட்டமிடலில் ஆணையத்துடன் சிங்கப்பூர் கட்டடக்கலை நிபுணர்கள் கழகமும் சிங்கப்பூர் திட்டமிடல் நிபுணர்கள் கழகமும் இணைந்து செயல்படுகின்றன.
1938ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட செம்பவாங் கடற்படை முகாமின் ஒரு பகுதியாக செம்பவாங் கப்பல் பட்டறை இருந்தது.
புதிய கடலோர வட்டாரத்தை ஒட்டிய பெருந்திட்டம், நகர வடிவமைப்பு உத்திகள் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைத் தனது உறுப்பினர்கள் சமர்ப்பிக்க கட்டடக்கலை நிபுணர்கள் கழகம் நவம்பர் 6ஆம் தேதியன்று போட்டி ஒன்றைத் தொடங்கியது.
அதே சமயம், சிங்கப்பூர் திட்டமிடல் நிபுணர்கள் கழகத்தைச் சேர்ந்த பிரதான குழு பெருந்திட்டத்திற்கான கருப்பொருள் தொடர்பாகக் கடந்த மே மாதம் இறுதியிலிருந்தது செயல்பட்டு வருகிறது.
செம்பவாங் கப்பல் பட்டறை மறுசீரமைப்பு தொடர்பாக இவ்விரு கழங்களின் பங்களிப்பு குறித்து அவற்றிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால் இரு கழகங்களும் கருத்துரைக்க மறுத்துவிட்டன.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து ரகசியம் காக்க வேண்டும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அவை குறிப்பிட்டன.
திட்டங்களை ஆராய்ந்து வருவதாகவும் தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் டிசம்பர் 20ஆம் தேதியன்று தெரிவித்தார்.
கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்றார் அவர்.