சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள இயற்கை வனப்பகுதியில் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் கட்டும் திட்டம் உள்ளது.
ஆனால், அது அருகிவரும் தாவர, உயிரினங்கள் வாழும் பகுதி என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகள் கூறுகின்றன.
செம்பவாங், உட்லண்ட்ஸ் ஆகிய இரு இடங்களில் உள்ள இயற்கை வனப்பகுதியில் புதிய வீவக வீடுகள் கட்டும் திட்டம் உள்ளது. செம்பவாங்கின் வடக்குப் பகுதியில் கிட்டத்தட்ட 8,000 தேவைக்கேற்ப கட்டப்படும் வீட்டுத் திட்டமும் 2,000 தனியார் வீடுகள் கட்டும் திட்டமும் உள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் கழகம் அறிவித்திருந்தது. எனினும், உட்லண்ட்ஸ் பகுதிக்கான திட்டம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அங்கு ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயுமாறு வீவக ‘ஏகோம்’ (Aecom) என்ற கட்டமைப்பு ஆய்வு நிறுவனத்தை பணித்திருந்தது. அந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், அங்கிருக்கும் உயிரினங்களின் வாழ்விடம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பது கண்டறியப்பட்டது.
எனினும், அதைக் குறைக்கும் விதமாக தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அங்குள்ள தாவர, உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறையும் என்றும் ஆய்வுகள் கண்டறிந்தன.
இந்த ஆய்வு முடிவுகளை கழகம் தனது இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளது. இதன் தொடர்பில் பொதுமக்கள் டிசம்பர் 10ஆம் தேதி வரை கருத்துக் கூறலாம் என்று கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
உட்லண்ட்சில், மார்சிலிங், அட்மிரல்டி சாலைகளுக்கு நடுவே, உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அருகே உள்ள 13 காற்பந்துத் திடல்கள் அளவு, 7.27 ஹெக்டர் நிலத்தில் வீவக கட்டுமானத் திட்டம் அமைய உள்ளது.
இந்த உட்லண்ட்ஸ் நிலப்பகுதி 195 தாவர இனங்களும் பெரும்பாலும் பறவை, பட்டாம்பூச்சிகளைக் கொண்ட 95 உயிரினங்களும் உள்ள இடம் என்று ஏகோம் கண்டறிந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அங்கு ஒருவகை அரிய மஞ்சள் நிற ‘வாப்லர்’ ( warbler) என்ற இனத்தை ஒத்த பறவையும் ‘கேவ் நெக்டர் பேட்’ (the cave nectar bat) என்ற ஒருவகை வௌவால் இனமும் பாதுகாப்புக்குரிய இனங்களாக ஏகோம் ஆய்வறிக்கை கோடிகாட்டியுள்ளது.
இதேபோல், 53 ஹெக்டர் அளவிலான செம்பவாங் நிலப்பகுதி 128 தாவர இனங்கள், 28 பெரிய செடி வகைளைக் கொண்ட இடம் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்த இடம் புக்கிட் தீமா இயற்கை வனப்பகுயில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

