இந்தோனீசியாவிலிருந்து நாள் ஒன்றுக்கு 111 பில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகுகள் வரை இயற்கை எரிவாயுவை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்வதற்கான விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரிசின் துணை நிறுவனமான செம்ப்கார்ப் கேஸ், இந்தோனீசியாவில் உள்ள மாகோ எரிவாயு உற்பத்தி வயலிலிருந்து குழாய் மூலம் எரிவாயுவைப் பெறும்.
அந்த ஒப்பந்தம் இயற்கை எரிவாயு விநியோகத்தை 2028ஆம் ஆண்டுக்கு அப்பாலும் நீட்டிக்கும் என்று செப்டம்பர் 2ஆம் தேதி செம்ப்கார்ப் கூறியது. வெஸ்ட் நட்டுனா எக்ஸ்ப்ளோரேஷன், எம்பிரியன் எனர்ஜி, கோரோ எனர்ஜி டுயுங் (சிங்கப்பூர்) ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
மாகோ எரிவாயு வயல்களுக்கான மூன்று நிறுவனங்களின் முதலீட்டு முடிவு, தேவையான ஒப்பந்தங்கள், விதிமுறை உடன்பாடுகளைப் பொறுத்து, 2025இன் முதல் பாதியில் இது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2026 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு விநியோகம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செம்ப்கார்ப் குறிப்பிட்டது.
இந்த ஒப்பந்தம் நடப்பு நிதியாண்டிற்கான பங்குகளின் வருவாய், நிலையான சொத்துகளின் நிகர பங்கு மதிப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
2023 செப்டம்பரில், கான்ராட் ஏசியா எனர்ஜியின் துணை நிறுவனமான வெஸ்ட் நட்டுனா எக்ஸ்ப்ளோரேஷன் உடன் செம்ப்கார்ப் மேற்கொண்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023 ஜூனில் இந்தோனீசியாவின் வெஸ்ட் நட்டுனா எரிவாயு வயலில் இருந்து குழாய் மூலம் ஏறக்குறைய $1.9 பில்லியன் மதிப்புள்ள இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான விற்பனை ஒப்பந்தத்தில் செம்ப்கார்ப் நிறுவனம் கையெழுத்திட்டது.