செங்காங் எல்ஆர்டி பாதையில் செல்லும் ரயில்கள், செங்காங் எல்ஆர்டி நிலையத்தை மேம்படுத்துவதற்கு வசதியாக, செப்டம்பர் 28, 29ஆம் தேதிகளில் கிழக்கு, மேற்கு சுற்றுப் பாதையில் ஒரு திசையில் மட்டுமே இயக்கப்படும்.
வழக்கமான எல்ஆர்டி ரயில் சேவை செப்டம்பர் 30 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் செப்டம்பர் 19ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
செங்காங் எல்ஆர்டி நிலையம் மேம்படுத்தப்பட்ட பிறகு, செப்டம்பர் 30 முதல், செங்காங் நிலையத்தில் பயணிகள் நான்கு செங்காங் எல்ஆர்டி வழித்தடங்கள் ஒவ்வொன்றிற்கும் பிரத்தியேக இடங்களில் ரயில்களில் ஏறலாம்.
2003ஆம் ஆண்டு திறக்கப்பட்ட செங்காங் எல்ஆர்டி பாதையில் 14 நிலையங்கள் உள்ளன. இரு திசைகளிலும் ரயில்கள் கிழக்கு, மேற்கு சுற்றுப்பாதைகளில் இயக்கப்படுகின்றன. ஆக அங்கு மொத்தம் நான்கு வழிகள் உள்ளன. செங்காங் நிலையம் ஒரு ரயில் சந்திப்பு நிலையமாகச் செயல்படுகிறது.
தற்போது, ரயில்கள் செங்காங் எல்ஆர்டி நிலையத்தில், இரண்டு நடைமேடைகளில் ஒவ்வொன்றிலும் ஓரிடத்தில் மட்டும் நிற்கின்றன.
ஒவ்வோர் இடமும் இரண்டு சுற்றுப் பாதைகளுக்கும் சேவை செய்கிறது. எனவே, புறப்படும் ரயில் எந்தப் பாதையில் செல்லும் என்பதை அறிய பயணிகள் நடைமேடைக்கு மேலே வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சித் திரையைப் பார்க்க வேண்டும்.
ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்ட பிறகு, ரயில்கள் ஒவ்வொரு நடைமேடையிலும் ஒன்றிற்குப் பதிலாக இரண்டு வெவ்வேறு இடங்களில் நிற்கும். அதாவது நான்கு எல்ஆர்டி வழித்தடங்கள் ஒவ்வொன்றிலும் பயணிகள் ஏறும் பிரத்தியேக இடத்தைக் கொண்டிருக்கும்.
“இது பயணிகளுக்கான வசதியை அதிகரிக்கும்,” என்று செப்டம்பர் 19ஆம் தேதி, ஒரு ஃபேஸ்புக் பதிவில், செங்காங் எல்ஆர்டி வழித்தடத்தை இயக்கும் போக்குவரத்து நடத்துநரான எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
செப்டம்பர் 28 வார இறுதியில் மேம்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், செங்காங் ஈஸ்ட் சுற்றுப்பாதையில் உள்ள ரயில்கள், ரங்குங் நிலையத்தின் திசையிலும், செங்காங் வெஸ்ட் சுற்றுப்பாதையில் உள்ள ரயில்கள் ரெஞ்சோங் நிலையத்தின் திசையிலும் மட்டுமே இயக்கப்படும்.


