தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செங்காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் தொகுதி உலா

2 mins read
bd460a64-cbc2-42b3-b7b1-b5c515cfd210
மசெகவின் நான்கு செங்காங் கிளைகளின் தலைவர்களான பேராசிரியர் எல்மி நெக்மட் (இடமிருந்து), திருவாட்டி பெர்னடெட் ஜியாம், டாக்‌டர் லாம் பின் மின், திருவாட்டி தியோ­டோரா லாய். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செங்காங் குழுத்தொகுதியில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க மக்கள் செயல் கட்சியின் புதிய, இளம் குழு கடுமையாக உழைத்து வருவதாக முன்னாள் மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் கூறியுள்ளார்.

கொவிட்-19 தொற்றுக்குப்பின் அந்தத் துடிப்புமிக்க குழு, நேர்மையுடனும் பேரார்வத்துடனும் செயல்படுவதாக டாக்டர் லாம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடைபெற்ற தொகுதி உலாவின்போது கூறினார்.

கண் மருத்துவரான டாக்‌டர் லாமுடன், 55, ‘தெம்புசு பார்ட்னர்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை அதிகாரி தியோ­டோரா லாய், 39, தேசியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் எல்மி நெக்மட், 43, ‘கிரியேட்டிவ் ஈட்டரீஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் பெர்னடெட் ஜியாம், 38, ஆகியோர் செங்காங் தொகுதியில் மக்களைச் சந்தித்தனர்.

டாக்டர் லாம், திருவாட்டி தியோடோரா, பேராசிரியர் எல்மி, திருவாட்டி பெர்னடெட் நால்வரும் மக்கள் செயல் கட்சியின் நான்கு செங்காங் கிளைகளின் தலைவர்களாக உள்ளனர்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் அணி செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சியிடம் தோற்றது. அப்போது போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அணியில் இன்னமும் எஞ்சியுள்ள உறுப்பினர் டாக்டர் லாம்.

செங்காங் கிராண்ட் மால் கடைத்தொகுதியிலும் ரிவர்வேல் ஷோர்ஸ் பகுதியில் உள்ள காப்பிக் கடையிலும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நடந்துசென்று மக்களைச் சந்தித்தனர். மக்களைக் கவர கட்சியைப் பிரதிபலிக்கும் கரடி பொம்மைகளையும் அவர்கள் விநியோகித்தனர்.

எதிர்க்கட்சியிடம் இழந்த தொகுதியைக் குறிப்பாக குழுத்தொகுதியை மீண்டும் கைப்பற்றுவது ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு எப்போதும் ஒரு சவால்தான். இருப்பினும் கட்சியின் அணி இதுவரை எடுத்திருக்கும் முயற்சிகள் கட்சியின் உழைப்புக்குச் சான்று என டாக்டர் லாம் சொன்னார்.

பேராசிரியர் எல்மியும் திருவாட்டி லாயும் கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்திலிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களுக்கு உதவ தம்முடன் இணைந்து நேரடியாகப் பணியாற்றி வருவதையும் டாக்‌டர் லாம் குறிப்பிட்டார். இவ்வாண்டு ஜனவரியில் புதிய உறுப்பினராகச் சேர்ந்த திருவாட்டி ஜியாமும் துடிப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

“இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் கொண்ட எங்கள் குழு பாலினச் சமநிலையைப் பிரதிபலிக்கிறது. எங்கள் குழு இளமையானது, பல்வகைத்திறன் கொண்டது,” என்றார் டாக்‌டர் லாம்.

இறுதி வேட்பாளர் பட்டியலை மக்கள் செயல் கட்சித் தலைமையகம் தீர்மானிக்கும் என்றார் அவர்.

நிதியுதவி, இணையப் பாதுகாப்பு, இலகு ரயில் பாதைகளில் கூட்ட நெரிசல் முதலிய பிரச்சினைகளைப் பொதுமக்‌கள் முன்வைத்துள்ளதாகவும் இவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறியத் தொடர்ந்து முயற்சி செய்வதாகவும் செங்காங் குழுத்தொகுதியின் புதிய குழு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்