செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவையின் பராமரிப்பு நிலையம் (depot) தற்போது உள்ளதைவிட மும்மடங்கு பெரிதாக உள்ளது.
விரிவாக்கப் பணிகள் 2027ஆம் ஆண்டில் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலையத்தில் புதிதாக ஒரு பராமரிப்புக் கட்டடம், பயணச் சேவைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கச் சோதனைத் தண்டவாளம் ஆகியவையும் இடம்பெறுகின்றன.
இதுகுறித்த தகவல்களை நிலப் போக்குவரத்து ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) வெளியிட்டது.
விரிவாக்கப் பணிகள் 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும் பராமரிப்பு நிலையத்தின் பரப்பளவு 3.5 ஹெக்டரிலிருந்து 11.1 ஹெக்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் கூறியது.
தற்போதுள்ள ரயில்களை நிறுத்துவதற்குப் போதுமான இடம், புதிய இலகு ரயில்களுக்கான இடம் என விரிவாக்கத்திற்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவைக்காக 25 இரண்டு பெட்டிகள் கொண்ட ரயில்கள் வாங்கப்பட்டன. அவற்றின் எடையும் கனமாக இருக்காது.
அண்மைக் காலமாக செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் மக்களுக்குச் சிறப்பான சேவை வழங்கும் நோக்கில் பராமரிப்பு நிலையம் விரிவுபடுத்த்பட்டுள்ளது.
செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவையை எஸ்பிஎஸ் போக்குவரத்து நிறுவனம் வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
வடக்கு கிழக்கு ரயில் பாதையும் செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையும் உச்ச நேரங்களில் மட்டுமில்லாமல் மற்ற நேரங்களிலும் நெரிசல் உள்ளதாகப் பயணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியதை நினைவுகொள்ள முடிகிறது.
அதேபோல் பொங்கோல் வட்டாரத்தில் வசிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தரவுபடி 2013ஆம் ஆண்டு பொங்கோலில் 87,610 குடியிருப்பாளர்கள் இருந்தனர். 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது 177,470ஆக கூடியது.
அதேநேரம் செங்காங்கிலும் குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2013ஆம் ஆண்டு செங்காங்கில் 172,680 குடியிருப்பாளர்கள் இருந்தனர். 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது 224,510ஆக கூடியது.

