தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவை முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பியது

2 mins read
90faebb4-6e97-418b-9099-41370d515a85
பொங்கோல் பேருந்து முனையத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை மணி 10.05க்கு இலவச இணைப்புப் பேருந்துச் சேவைகள் வழங்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செங்காங்-பொங்கோல் இலகு ரயில் கட்டமைப்பில் சேவை முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) காலை ஏற்பட்ட மின்சாரக் கோளாற்றால் ரயில் சேவை தடைப்பட்டது.

செங்காங்கில் ஃபார்ம்வே, குப்பாங் நிலையங்களுக்கு இடையில் கம்பிவடப் பிரச்சினையால் இலகு ரயில் கட்டமைப்பின் மின்சாரம் காலை மணி 8.40க்குத் துண்டிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனால் ரயில் கட்டமைப்பின் 29 நிலையங்களும் பாதிக்கப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தது.

செங்காங் இலகு ரயில் கட்டமைப்பில் முற்பகல் மணி 11.05லிருந்தும் பொங்கோல் கட்டமைப்பில் முற்பகல் மணி 11.20லிருந்தும் சேவைகள் கட்டங்கட்டமாக வழக்கநிலைக்குத் திரும்பின.

பொங்கோல் இலகு ரயில் சேவை பிற்பகல் மணி 12.32க்கும் செங்காங் இலகு ரயில் சேவை பிற்பகல் மணி 12.54க்கும் முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பின.

அதன் பின்னர் செங்காங் இலகு ரயில் தடம் அதன் கிழக்கு, மேற்குப் பாதைகளில் ஒரு திசையில் மட்டுமே சேவை வழங்கும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது.

அவ்வாறு செய்வது கம்பிவடங்களைச் சோதிக்க உதவியாக இருக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.

சேவை தடைப்பட்டபோது பயணிகளுக்கு உதவும் வகையில் இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்பட்டன.

செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவையில் நான்கு நாள்களில் இரண்டாவது முறையாக நேற்று தடை ஏற்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) அந்தச் சேவை முற்பகல் சுமார் 11 மணிக்குத் தடைபட்டது.

பின்னர் அன்றிரவு கிட்டத்தட்ட 9.20க்குச் சேவை முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பியது.

குறிப்புச் சொற்கள்