அக்டோபர் 4ல் முழுமையாகச் செயல்படும் செங்காங் வெஸ்ட் எல்ஆர்டி

அக்டோபர் 4ல் முழுமையாகச் செயல்படும் செங்காங் வெஸ்ட் எல்ஆர்டி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Oct 2026 - 7:58 pm

2 mins read

செங்காங் வெஸ்ட் இலகு ரயில் பாதையின் சேவைகள் இம்மாதம் 4ஆம் தேதி மீண்டும் அதன் சேவைகளை முழுமையாகத் தொடங்கவிருக்கிறது.

செங்காங் - பொங்கோல் பணிமனையின் மேம்பாடுகளுக்காக ரயில் சேவையின் உள் பாதை ஆறு மாதங்கள் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் திட்டமிடப்பட்டதைவிட இரண்டு வாரங்களுக்கும் முன்னரே செங்காங் வெஸ்ட் இலகு ரயில் பாதை சேவையைத் ‌தொடங்குகிறது.

தொடக்கத்தில் 3.5 ஹெக்டர், அதாவது ஐந்து காற்பந்தாட்டத் திடல்களுக்குச் சமமான பரப்பளவைக்கொண்ட பணிமனையை விரிவுபடுத்துவதற்கான மேம்பாட்டுப் பணிகள் 2022ஆம் ஆண்டிலிருந்து நடைபெறுகின்றன.

2027ஆம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தவுடன் பணிமனையின் பரப்பளவு 11.1 ஹெக்டராக இருக்கும். அதிகரித்துவரும் சேவைக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய கூடுதலான ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட முடியும்.

தற்போதைய தேவையைப் பூர்த்திசெய்ய, வடகிழக்குப் பகுதியில் செயல்படும் போக்குவரத்து உச்சநேரம் அல்லாத இலவச திட்டம் ஒன்று 2027ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும்.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அந்தத் திட்டத்தின்கீழ், வார நாள்களில் காலை 7.30 மணிக்கு முன்னர் அல்லது காலை 9 மணியிலிருந்து 9.45 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் வடக்கு- கிழக்கு ரயில் பாதையின் எந்த நிலையத்தில் நுழையும் பயணிகளும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

பயணிகளில் கிட்டத்தட்ட 7 விழுக்காட்டினர் பயண நேரத்தை மாற்றிக்கொள்வர் என்ற எண்ணத்தில் திட்டம் அமல்படுத்தப்பட்டதாகக் கூறிய போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன்‌ ‌ஷுவெலிங், கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினர் பயணத்தை மாற்றிக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

“திட்டத்தைத் தற்போது நீட்டிப்பதன் மூலம் கூடுதலான பயணிகள் போக்குவரத்து உச்சநேரம் அல்லாத நேரங்களில் பயணம் செய்ய ஊக்குவிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் அவர்.

தீவின் வடகிழக்குப் பாதையில் உள்ளோரை நகர மையத்திற்கு இணைக்கும் வடக்கு-கிழக்கு ரயில் பாதை சிங்கப்பூரில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பாதைகளில் ஒன்று.

இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி ஒவ்வொரு நாளும் அந்தப் பாதை வழியாகக் கிட்டத்தட்ட 602,000 பேர் பயணம் செய்வதாகப் பாதையை இயக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க அது 1.5 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்