23வது சீனா-ஆசியான் கண்காட்சியில் கலந்துகொண்ட மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங்

23வது சீனா-ஆசியான் கண்காட்சியில் கலந்துகொண்ட மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங்

படம்: வர்த்தக, தொழில்துறை அமைச்சு

21 Sep 2026 - 8:06 pm

2 mins read

சீனாவின் குவாங்சி வட்டாரத்தில் உள்ள நானிங் நகரில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற 23வது சீனா-ஆசியான் கண்காட்சியின் (CAEXPO) தொடக்க விழாவில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் கலந்துகொண்டார்.

மேலும், அக்கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த சிங்கப்பூரின் தேசிய, வர்த்தகப் பொருள் அரங்குகளையும் அவர் பார்வையிட்டார்.

சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான இருதரப்புப் பொருளியல் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வருடாந்தர வர்த்தகக் கண்காட்சியாக இது விளங்குகிறது.

கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மூத்த துணையமைச்சர், “ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தவும், கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும், புதிய பங்காளித்துவங்களை உருவாக்கவும் சீனா-ஆசியான் கண்காட்சி ஒரு முக்கியத் தளமாகத் விளங்குகிறது எனக் கூறினார்.

மேலும், 2023ஆம் ஆண்டிற்குப் பிறகு இவ்வாண்டு 50க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

“2027ஆம் ஆண்டில் ஆசியான் தலைமைப் பொறுப்பையும் சீனா-ஆசியான் கண்காட்சியில் முதன்மை நாடுக்கான சிறப்புத் தகுதியையும் ஏற்கச் சிங்கப்பூர் ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், மின்னிலக்கத் தொடர்பு, பசுமை வளர்ச்சி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த வாய்ப்பை ஆசியான், சீன நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” எனத் திருவாட்டி லோ கேட்டுக்கொண்டார்.

நானிங் நகருக்குச் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை திருவாட்டி லோ அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.

தம் பயணத்தின் ஒரு பகுதியாகச் சீனா, சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகப் பிரதிநிதிகளையும் சீன அமைச்சர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

மேலும், தொழில்துறை பயன்பாடுகளுக்கான தானியக்க இயந்திரத் தீர்வுகளை மேம்படுத்தும் குவாங்சி-ஆசியான் செயற்கை நுண்ணறிவு முன்னோடிப் பயிற்சித் தளத்தையும் கடல்சார் தொடர்புகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிங்லு கால்வாய் கண்காட்சி நிலையத்தையும் அவர் பார்வையிட்டார்.

குறிப்புச் சொற்கள்
ஆசியான்கண்காட்சிபொருளியல்பயணம்துணைஅமைச்சர்சீனா