மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஜே.எம்.சாலி என்றழைக்கப்படும் ஜமாலுதீன் முகம்மது சாலி வெள்ளிக்கிழமை (மே 15) காலமானார்.
அவருக்கு வயது 87.
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சார்ந்த நீடூரில் வசித்துவந்த அவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமது இல்லத்திலேயே வெள்ளிக்கிழமை காலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தமிழ் முரசு நாளிதழில் பணியாற்ற 1964ல் சிங்கப்பூருக்கு வந்தார் திரு சாலி. 1971ஆம் ஆண்டுவரை தமிழ் முரசில் உதவி ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.
பின்னர் தமிழகம் திரும்பி 1981வரை ஆனந்த விகடன் வார இதழிலும் மயன் என்ற இளையர் இதழிலும் பணியாற்றிவிட்டு, 1983ல் மீண்டும் தமிழ் முரசில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அவ்வாண்டிலேயே முரசிலிருந்து விலகி, சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தில் செய்தி ஆசிரியராகச் சேர்ந்தவர், 17 ஆண்டுகள் அங்குப் பணிபுரிந்து 2000ல் ஓய்வுபெற்றார்.
“திரு சாலி, சிங்கப்பூரின் சிறந்த செய்தி மொழிபெயர்ப்பாளர், தொகுப்பாளர்களில் ஒருவர்,” என்று கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் வானொலி, தொலைக்காட்சி செய்திப் பிரிவில் பணிபுரிந்த மூத்த செய்தியாளர் திரு செ.ப.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய சமயத்துடன், இந்து சமயம், மற்ற சமயங்கள் குறித்தும் நன்கு அறிந்தவரான திரு சாலி, சமயநல்லிணக்க ஆர்வலராகத் திகழ்ந்தார். அவரைப் போன்ற திறமைசாலிகளின் மறைவு சிங்கப்பூருக்குப் பேரிழப்பு என்று வருத்தம் தெரிவித்தார் திரு பன்னீர்செல்வம். “அருமையான மனிதர், அதிர்ந்து பேசமாட்டார். நல்ல செய்தியாளர். நெருங்கிய நண்பரின் மறைவு வேதனையளிக்கிறது,” என்றார் திரு சாலியுடன் 1983 முதல் தொலைக்காட்சி தமிழ்ச் செய்திப் பிரிவில் இணைந்து பணியாற்றி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா ஆண்டியப்பன். செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி எனப் பல ஊடகங்களிலும் பணிபுரிந்துள்ள திரு சாலி, சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டவர்.
“தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் தமது ஜனரஞ்சக எழுத்தினால் பலரைக் கவர்ந்தவர் எழுத்தாளர் சாலி. பல நாவல்களை எழுதியுள்ளார். இரு நாடுகளிலும் பல உயரிய விருதுகளைப் பெற்றவர்,” என்று சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் திரு இராம.கண்ணபிரான் நினைவுகூர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
கலை, இலக்கியத் துறையில் சிங்கப்பூர் அரசாங்கம் அளிக்கும் உயரிய அங்கீகாரமான கலாசாரப் பதக்கம் (2012), தென்கிழக்காசிய எழுத்து விருது (2015), தமிழ்ச் செய்தியின் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் ‘தமிழவேள்’ விருது, கவிமாலையின் கணையாழி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர் எழுத்தாளர் ஜே.எம்.சாலி.
சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இஸ்லாமிய நூல்கள், மொழிபெயர்ப்பு என்று ஏறக்குறைய 60 நூல்களைத் திரு சாலி எழுதியுள்ளார்.
1939 ஏப்ரல் 10ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திலுள்ள இரவாஞ்சேரியில் பிறந்த அவர், இரவாஞ்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்தார். குடந்தை அரசினர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
அவர் மனைவியையும் மகனையும் விட்டுச் சென்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை நீடூரில் அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்படும்.


