தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அப்துல்லா படாவியின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது; நேரில் சென்று மரியாதை செலுத்தினார் லீ சியன் லூங்

2 mins read
cfd42b07-946f-4bcb-b3ad-944e773ec814
கோலாலம்பூரில் உள்ள தேசிய பள்ளிவாசலில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த திரு அப்துல்லா அகமது படாவியின் நல்லுடலுக்கு மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் (வலது) அவரது துணைவியார் திருவாட்டி ஹோ சிங்கும் (திரு லீயின் வலது பக்கத்தில்) மரியாதை செலுத்தினார். - படம்: பெர்னாமா
multi-img1 of 2

முன்னாள் மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவி திங்கட்கிழமை (ஏப்ரல் 14) காலமானார். அவருக்கு 85 வயது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய நிலையத்தில் அவரது உயிர் பிரிந்தது.

திரு அப்துல்லா படாவி கடந்த சில ஆண்டுகளாக நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) பிரியாவிடை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திரு அப்துல்லா படாவியின் நல்லுடல் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை கோலாலம்பூரில் உள்ள தேசிய பள்ளிவாசலில் பொதுமக்கள் மரியாதை செலுத்த கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, தேசிய பள்ளிவாசலின் மாவீரர்கள் கல்லறையில் அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.

திரு அப்துல்லா படாவியின் இறுதிச் சடங்கில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஏப்ரல் 15 அன்று கலந்துகொண்டார்.

திரு லீயுடன் அவரது துணைவியார் ஹோ சிங்கும் வெளியுறவு அமைச்சை சேர்ந்த அதிகாரிகளும் சென்றனர்.

‘பாக் லா’ என்று செல்லமாக அழைக்கப்படும் திரு அல்துல்லா படாவி, 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மலேசியாவின் ஐந்தாவது பிரதமராகப் பதவி வகித்தார்.

அப்போது சிங்கப்பூரின் பிரதமராகத் திரு லீ சியன் லூங் பதவி வகித்தார்.

“திரு அப்துல்லா படாவி, முழு அர்ப்பணிப்புடன் மலேசியாவுக்குச் சேவையாற்றினார். மலேசியா எதிர்கொண்ட சவால்களை எதிர்கொள்ளவும் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அவர் ஓய்வு ஒழிச்சலின்றி அயராது உழைத்தார்,” என்றார் திரு லீ.

திரு அப்துல்லா படாவிக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் புகழாரம் சூட்டினார்.

திரு அப்துல்லா படாவி மரியாதைக்குரிய தலைவர் என்றும் உலகளாவிய நிலையில் ஆசியான் புகழ்பெற அவர் உதவியதாகவும் திரு வோங் பாராட்டினார்.

திரு அப்துல்லா படாவியின் தலைமையின்கீழ் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுவடைந்ததை அவர் சுட்டினார்.

மலேசிய அமைச்சரவையில் பல ஆண்டுகள் சேவையாற்றிய திரு அப்துல்லா படாவி, கௌரவமிக்க தலைவர் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பாராட்டினார். அவர் சிங்கப்பூருடன் மிக அணுக்கமாகச் செயல்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

மலேசியாவின் பிரதமராகப் பதவி ஏற்பதற்கு முன்பு கல்வி, தற்காப்பு, வெளியுறவு அமைச்சராகவும் திரு அப்துல்லா படாவி பதவி வகித்ததை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்