மூத்த அமைச்சர் லீக்கு ஜப்பானின் உயரிய விருது

ஜப்பான்-சிங்கப்பூர் உறவை மேம்படுத்தியதற்கு அங்கீகாரம்

மூத்த அமைச்சர் லீக்கு ஜப்பானின் உயரிய விருது

2 mins read
7fec17cf-db61-4c73-9d10-394bc471fb7f
ஜப்பானியப் பிரதமர் ‌ஷிகெரு இ‌ஷிபாவிடமிருந்து (வலம்) மூத்த அமைச்சர் லீ சியன் லூங் விருதைத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) பெற்றுக்கொண்டார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு ஜப்பானின் பெருமைமிகு உயரிய விருது திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) வழங்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு உறவை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் ‘கிரேண்ட் கோர்டன் ஆஃப் தி ரைசிங் சன்’ (Grand Cordon of the Order of the Rising Sun) விருதை வழங்கித் திரு லீயை ஜப்பான் பாராட்டியிருக்கிறது.

ஜப்பானியப் பிரதமர் ‌ஷிகெரு இ‌ஷிபாவிடமிருந்து திரு லீ விருதைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் உரையாற்றிய திரு லீ, விருதைப் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்.

“பல தலைமுறை சிங்கப்பூரர்களின் சார்பில் விருதை ஏற்றுக்கொள்கிறேன். இரு தரப்பு உறவை மேம்படுத்துவதற்கு அவர்கள் பல்லாண்டுகளாக ஜப்பானியத் தரப்பினருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளனர்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.

2004ஆம் ஆண்டு முதல் 2024 வரை சிங்கப்பூரின் பிரதமராக இருந்தபோது பொருளியல், வர்த்தகம், தற்காப்பு, அரசதந்திரம், சுற்றுப்புறம், கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவு விரிவடைய அவர் பங்காற்றியிருக்கிறார்.

திரு இ‌ஷிபா அவரின் பாராட்டு உரையில், மூத்த அமைச்சர் லீயை ஆசியாவின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார்.

திரு லீயின் தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூரும் ஜப்பானும் தங்களுக்கு இடையிலும் அனைத்துலக அளவிலும் அணுக்கமாய்ப் பணியாற்றியிருப்பதாக அவர் சொன்னார்.

இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு, நட்புணர்வு, நல்லெண்ணம் முதலியவற்றை வெகுவாய் வலுப்படுத்தத் திரு லீ பெரும்பங்காற்றியிருப்பதாக ஜப்பானியப் பிரதமர் மெச்சினார்.

குறிப்புச் சொற்கள்