மூத்த அமைச்சர் லீ சீனாவுக்கு ஐந்து நாள் பயணம்

மூத்த அமைச்சர் லீ சீனாவுக்கு ஐந்து நாள் பயணம்

2 mins read
0009d2fe-e6f5-459c-97e4-a4f321bf2a3e
மூத்த அமைச்சர் லீ சியன் லூங். - கோப்புப் படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சீனாவுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொள்ள இருப்பதாகப் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (மே 17) தெரிவித்தது.

பயணத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (மே 18) சீனாவின் தென்பகுதி தன்னாட்சி வட்டாரமான குவாங்ஸிக்கு அவர் செல்வார்.

வெள்ளிக்கிழமை (மே 22) வரை நீடிக்கும் திரு லீயின் பயணம் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான உயர்மட்டப் பரிமாற்றங்களின் வேகத்தை மேலும் வலுப்படுத்துவதோடு வட்டார அளவில் சீனாவுடனான உறவுகளையும் ஆழப்படுத்தும் என்று பிரதமர் அலுவலக அறிக்கை குறிப்பிட்டது.

குவாங்ஸியில் இருக்கும்போது, ​​மூத்த அமைச்சர் லீ, குவாங்ஸி ஸுவாங் தன்னாட்சி வட்டாரக் குழுவின் சீன கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் சென் காங்கைச் சந்தித்து, அவரது விருந்து உபசரிப்பை ஏற்பார்.

இதற்கு முன்னர், சீன-ஆசியான் 11வது வருடாந்திர எக்ஸ்போவில் கலந்துகொள்ள 2014ஆம் ஆண்டு குவாங்ஸி சென்றிருந்தார் திரு லீ.

இவ்வாரத்தின் பிற்பகுதியில் ஷாங்காய் நகர் செல்லும் மூத்த அமைச்சர், ஷாங்காய் நகரமன்ற மக்கள் அரசாங்கத்தின் மேயரைச் சந்தித்து அவர் அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்பார்.

அத்துடன், சீனாவில் பரந்து விரிந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டறிய அது தொடர்பான நிறுவனங்களுக்கு திரு லீ சென்று பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் ஆகப்பெரிய சரக்கு வர்த்தகப் பங்காளியாக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை சீனா இருந்தது.

தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு அவற்றின் இருதரப்பு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு S$162.9 பில்லியனைத் தொட்டது. அது சிங்கப்பூரின் உலகளாவிய சரக்கு வர்த்தகத்தில் 11.7 விழுக்காடு ஆகும்.

முதலீட்டு வரவுகளின்படி பார்த்தால் சீனாவின் ஆகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராகக் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் திகழ்ந்து வருகிறது.

சீனாவில் சிங்கப்பூரின் மூன்று அரசாங்கத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

1994ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுஸோ தொழிலியல் பூங்கா, 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சீன-சிங்கப்பூர் தியான்ஜின் சுற்றுச்சூழல் நகரம், 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சோங்கிங் இணைப்பு நடவடிக்கை போன்றவை அந்த மூன்று திட்டங்கள்.

குறிப்புச் சொற்கள்