காஸா மக்களுக்கு ஏழாவது முறையாக மனிதாபிமான உதவிப் பொருள்களை வழங்க, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் விமானம் ஒன்று புதன்கிழமை (பிப்ரவரி 12) ஜோர்தான் சென்றடைந்தது.
ஜோர்தானின் ஹஷ்மைட் அறக்கொடை அமைப்பு மூலம் காஸாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருள்களை வழங்க தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது ஜோர்தான் தலைநகர் அம்மானில் உள்ளார்.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் சாங்கி வட்டார மனிதாபிமான உதவி அமைப்பும் பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு நிலையமும் இணைந்து உதவிப் பொருள்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தன. அந்த உதவிப் பொருள்களில் மருத்துவ, உணவு, சுகாதாரப் பொருள்கள் அடங்கும்.
“இந்த நோக்கத்துக்கு ஆதரவு வழங்கியதற்காக சிங்கப்பூர் ஆயுதப்படையின் சேவையாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் நிபுணத்துவத்தையும் கடப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
“ஜோர்தானிய சகாக்களின் வலுவான ஆதரவுக்காகவும் நான் அவர்களிடம் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த ஆதரவால், காஸாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருள்களை வழங்குவதில் அணுக்கமாக ஒத்துழைக்க முடிந்தது,” என்றார் திரு ஸாக்கி.
காஸாவில் பல கட்டங்களைக் கொண்ட போர்நிறுத்தத்தையும் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டதையும் தொடர்ந்து, தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றன.