தற்காப்பு, அரசதந்திரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனின் பங்களிப்பு, சிங்கப்பூரில் அழிக்கவியலாத முத்திரையைப் பதித்துள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (மே 6) திரு டியோவுக்கு எழுதிய பிரியாவிடைக் கடிதத்தில், சிங்கப்பூருக்கு அவர் ஆற்றிய வாழ்நாள் சேவைக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
திரு டியோவின் வலுவான, நிலையான சேவையையும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்குமான அவரது அர்ப்பணிப்பையும் திரு வோங் தமது கடிதத்தில் பாராட்டியுள்ளார்.
தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பணியாற்றிய திரு டியோவுக்கு வயது 70. அவர் அமைச்சரவையிலிருந்து அரசியலிலிருந்தும் ஓய்வுபெறுகிறார்.
திரு டியோவுக்கு எழுதிய கடிதத்தில், “தங்களது 53 ஆண்டுகால பணிவாழ்க்கையைச் சிங்கப்பூரின் நலனையும் சிங்கப்பூரர்களின் நலன்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அர்ப்பணித்துள்ளீர்கள்,” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான, கடினமான விவகாரங்களில் ஆழ்ந்த சிந்தனையுடனும், உறுதியுடனும் மூத்த அமைச்சர் டியோ தலைமையேற்றுப் பணிபுரிந்ததாகத் திரு வோங் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை போன்ற குறிப்பிட்ட அம்சங்களை மறுஆய்வு செய்வதற்கான அரசமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தியது போன்றவற்றை அவர் சுட்டினார்.
ஆக அண்மையில், ‘பிஸ்ஃபைல்’ சேவையில் அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்துவது தொடர்பான மறுஆய்வைத் திரு டியோ மேற்கொண்டார். அதன் பிறகு, எங்கே தவறு நடந்தது, எப்படி நாம் மேம்படுத்திக் கொள்ளலாம் என்பன குறித்த முழுமையான, பாரபட்சமற்ற, உறுதியான ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 கிருமிப் பரவலின்போது திரு டியோவின் தலைமைத்துவம் முன்மாதிரியான, மதிப்புமிக்க முறையில் அமைந்திருந்ததாகப் பிரதமர் வோங் கூறினார். வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் கிருமிப் பரவலை விரைவாகக் கையாளும் முயற்சிகளுக்குத் திரு டியோ தலைமை தாங்கியதாக அவர் சொன்னார்.
1972ல் சிங்கப்பூர் குடியரசு கடற்படை அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய திரு டியோ, 1992ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். நாட்டுக்கான பங்களிப்பில் 16 ஆண்டுகள் தற்காப்பு அமைச்சில் பொறுப்பேற்றிருந்தார்.
கல்வி அமைச்சராக இருந்தபோது சிங்கப்பூரை அறிவுசார் பொருளியலாகத் தயார்ப்படுத்தத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் மேற்கொண்டார்.
பின்னர் துணைப் பிரதமராகவும் மூத்த அமைச்சராகவும் முக்கியமான தேசிய விவகாரங்களில் தமது ஆழ்ந்த அனுபவம், அறிவாற்றல் ஆகியவற்றின் மூலம் பங்களித்ததைக் குறிப்பிட்ட பிரதமர், தாமும் தமது குழுவினரும் திரு டியோவின் நெறிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றிச் சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்லத் தங்களால் ஆன அனைத்தையும் செய்யவிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

