செந்தோசா கோவ்வில் உள்ள ‘ஒன்°15 மரினா கிளப்’ மன்றம் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மன்றத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ‘ஈகிள் விங்ஸ் III’ என்ற சொகுசுப் படகில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) காலை தீ மூண்டதை அடுத்து அதன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்றத்துக்கு அருகில் உள்ள படகு நிறுத்துமிடம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாரிகளின் ஒப்புதலுடன் செயல்பாடுகளை முழுமையாகத் தொடங்கிவிட்டதாக மன்றம் திங்கட்கிழமை (ஜூன் 8) தெரிவித்தது. “உறுப்பினர்கள், விருந்தினர், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம்,” என்றும் அது குறிப்பிட்டது.
‘ஈகிள் விங்ஸ் III’ சொகுசுப் படகில் தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது எனத் தெரிவித்த மன்றம், அதிகாரிகளுடன் ஒத்துழைத்துவருவதாகவும் கூறியது.
தீ விபத்தின்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கிட்டத்தட்ட 50 விருந்தினர்கள் தங்குவதற்கான வசதியைக் கொண்ட ‘ஈகிள் விங்ஸ் III’ சொகுசுப் படகில் உணவருந்தும் பகுதி, ‘ஜக்கூசி’ குளியல் தொட்டி ஆகியவையும் உள்ளன.
ஜூன் 7ஆம் தேதி காலை 8.10 மணியளவில் சொகுசுப் படகு ஒன்றில் தீ மூண்டது குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். சொகுசுப் படகின் பெரும்பகுதி தண்ணீரில் மூழ்கியது.

