இயற்கையோடு இணைந்து புதுப்பொலிவு பெறும் செந்தோசா

இயற்கையோடு இணைந்து புதுப்பொலிவு பெறும் செந்தோசா

2 mins read
da114f63-61bb-435d-9c0b-e912ddd5f1ce
செந்தோசாவின் கடற்கரைகளில் சிறு தீவுகளுக்கு இடையே உலா வரும் அனுபவத்தைச் சித்திரிக்கும் ஓவியரின் கைவண்ணம். - படம்: செந்தோசா மேம்பாட்டுக் கழகம்
Google News Preferred Icon

செந்தோசா தீவை இயற்கையோடு இணைத்து மேம்படுத்தும் புதுப்பித்தல் பணிகள் நடைபெற உள்ளதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு, ‘ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா’, ‘யுனிவர்சல் ஸ்டூடியோஸ்’ ஆகியவை திறக்கப்பட்டன. அதற்குப் பிறகு இத்தீவில் எவ்விதப் பெரிய மேம்பாட்டுப் பணிகளும் நடைபெறவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா.
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா. - படம்: செந்தோசா மேம்பாட்டுக் கழகம்

பொதுமக்கள் இயற்கையுடன் கொண்டுள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் விரும்புவதால், செந்தோசாவின் கடற்கரைகளும் நீர்முகப்பும் மேம்படுத்தப்படவுள்ளன.

செந்தோசாவின் மேற்குக் கடலோரப் பகுதியில் தற்போது பொதுமக்கள் அணுக முடியாத இடங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர் வோங், அப்பகுதியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் அதேவேளையில், மக்கள் அங்குச் செல்வதற்கான வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

செந்தோசாவின் மேற்குக் கடலோரப் பகுதி.
செந்தோசாவின் மேற்குக் கடலோரப் பகுதி. - படம்: செந்தோசா மேம்பாட்டுக் கழகம்

“இப்பகுதி வளமான கடல்வாழ் உயிரினங்களையும் தனித்தன்மை வாய்ந்த கடற்கரைப் பாறைகள் உள்ளிட்ட தனித்துவமான புவியியல் அமைப்பையும் கொண்டுள்ளது,” என்று அவர் விவரித்தார்.

இம்முயற்சிகளின்வழி, சிங்கப்பூரர்கள் இதுவரை கண்டிராத, மற்றொரு கோணத்தில் செந்தோசாவைக் காணமுடியும் என்றார் திரு வோங்.

இந்த இயற்கை சார்ந்த புதுப்பிப்பு, அடுத்த இருபதாண்டுகளில் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் ‘கிரேட்டர் செந்தோசா’ பெருந்திட்டத்தின் (Greater Sentosa Master Plan) ஒர் அங்கமாகும்.

இதன் மற்றொரு பகுதியாகக் கடற்கரை மேம்பாட்டுப் பணிகள் சிலோசோ கடற்கரையில் தொடங்கி, பின்னர் பலவான், தஞ்சோங் கடற்கரைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அலையால் ஏற்படும் கடற்கரை அரிப்பைத் தடுக்க அமைக்கப்பட்ட சிறிய தீவுகளை இணைக்கும் வகையில் மிதக்கும் நடைபாதை அமைக்கப்படும். மக்கள் முதன்முறையாக அந்தத் தீவுகளுக்குச் சென்று 3 கி.மீ கடற்கரை எழிலை அருகிலிருந்து ரசிக்கலாம்.

“சிங்கப்பூரின் நிலப்பகுதி சிறியது என்பதால், ஒவ்வொரு நிலமும் நமக்கு மிக முக்கியமானது. நமது எதிர்காலக் கனவுகளை நனவாக்க நாம் தற்போதைய சூழலைத் தாண்டிச் சிந்திக்க வேண்டியுள்ளது,” என்ற கூறிய பிரதமர், இந்தச் சிறிய தீவில் வீடுகள், வேலைகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு ஆகிய அனைத்துத் தேவைகளுக்கும் இடம் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

“அதேநேரம் பசுமை இடங்கள், பல்லுயிர்ச் சூழல், மரபுடைமை, வரலாற்று இடங்கள் ஆகியவற்றைச் சமமாகப் போற்றுவதில் நாம் கவனம் செலுத்துகிறோம்.

“அரசாங்கம் மேம்பாடு தேவைப்படும் அம்சங்களில் தாக்கத்தைக் கவனமாக ஆராய்ந்து, இடையூறுகளைக் குறைக்கும்,” என்று பிரதமர் கூறினார்.

“நமது முன்னோடிகள் ஒரு பூந்தோட்ட நகரத்தை உருவாக்கினர். இன்று நாம் அதனை ‘இயற்கையில் அமைந்த நகரம்’ (City in Nature) என்ற நிலைக்குக் கொண்டு செல்ல முயல்கிறோம்,” என்றார் அவர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்