வட்ட ரயில் பாதையில் செய்யப்பட்டுள்ள சேவை மாற்றங்களால் அதிக நேரம் காத்திருந்த பயணிகளுக்குத் தொடக்கத்தில் சற்று குழப்பம் ஏற்பட்டாலும் ஊழியர்களின் உதவியுடன் தங்கள் பயணங்களைத் தொடர்ந்தனர்.
ஜனவரி 17ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள், பாயா லோபார் நிலையத்திற்குச் சென்றபோது பயணிகள் நடமாட்டம் நிலையாக, சுமுகமாக இருந்ததைக் கண்டனர்.
மவுண்ட்பேட்டனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில்களுக்கான காத்திருப்பு நேரம் 10 நிமிடங்கள் வரை நீண்டிருந்தது.
ரயில் கதவு ஒவ்வொன்றிலும் எட்டு முதல் பத்துப் பேர் வரை காத்திருந்தனர்.
நிலைய பணியாளர்கள் குறைந்தது 10 பேர், ஒளிக்கோல்களுடனும் ஒலிப்பெருக்கிகளுடனும் கூட்டத்தினரை வழிநடத்தினர்.
மவுண்ட்பேட்டன், டக்கோட்டா, பாயா லேபார் நிலையங்களுக்கிடையே ஒரே தடத்தில் இயங்கும் இந்த ரயில்கள், எட்டரை நிமிடங்களுக்கும் ஒன்பதரை நிமிடங்களுக்கும் இடைப்பட்ட இடைவெளிகளில் அந்தந்த நிலையங்களை அடைந்தன.
சேவை மாற்றங்களைப் பற்றி பயணிகள் சிலருக்கு முன்னதாகவே தெரிந்தபோதும் எந்த ரயில்களை எடுப்பது என்பதில் குழம்பியதாகக் கூறப்பட்டது.
முன்னதாக வைக்கப்பட்டிருந்த பதாகைகளால் சேவை மாற்றங்களைப் பற்றி தெரிந்திருந்த 63 வயது கேரன் சியாவ், எப்படி பயணம் செய்யவேண்டும் என்பதைப் பணியாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
டக்கோட்டாவில் தம் வேலையிடம் இருப்பதாகக் கூறிய திருவாட்டி சியாவ், 10 நிமிட ரயில் சேவை இடைவேளை ஏற்கத்தக்கது என நினைப்பதாகக் கூறுகிறார்.
ஜனவரி 17ல் வட்ட ரயில் பாதையில் சேவை மாற்றங்களுக்கான வேலைப்பாடுகள் தொடங்கின. உச்ச நேரங்களில் இந்த மாற்றங்களால் 30 நிமிடங்கள் வரை தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
2026 ஏப்ரல் 19 வரை இந்த மாற்றங்கள் நீடிக்கும். இந்தக் காலகட்டத்தில் இந்த ரயில் தடத்தில் பயணங்கள் குறைக்கப்படும்.
மவுண்ட்பேட்டன், டக்கோட்டா, பாயா லோபார் ஆகிய சாலைகளை இணைக்கும் 450 மீட்டர் சுரங்கங்களுக்கு வலுசேர்க்கும் பணிகளுக்கு வசதியளிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நேரங்களில் புதிய நிலப்போக்குவரத்து ஆணையம் பேருந்துச் சேவையை அறிமுகப்படுத்தியதுடன் கூட்டங்களைப் பற்றி உடனக்குடன் தெரிவிக்கும் கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கூட்டங்களைக் காட்டும் படங்கள் இந்தக் கருவியில் சேர்க்கப்படும். ஜனவரி 19 முதல் இந்த மின்னிலக்கக் கருவி இயங்கத் தொடங்கும்.

