சிங்கப்பூர் ஏர்லைன்சும் ஸ்கூட்டும் மீண்டும் சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையே சேவை வழங்கவிருக்கின்றன.
வியாழக்கிழமை (ஜூன் 26) சிங்கப்பூர்-துபாய் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிங்கப்பூருக்கும் சவூதி அரேபியாவின்ஜெடா நகருக்கும் இடையிலான சேவைகள் வரும் சனிக்கிழமை (ஜூன் 28) மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவரத்தைப் பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பதிலளித்தது.
வரும் நாள்களில் மத்திய கிழக்கு, ஐரோப்பிய வட்டாரங்களுக்கு விமானத்தில் பயணம் மேற்கொள்வோர் சேவைத் தாமதத்தை எதிர்நோக்கலாம் என்று சிங்கப்பூரர்களுக்கு முன்னதாக தெரியப்படுத்தப்பட்டது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடப்பில் இருக்கும் போர்நிறுத்தம் விமான நிறுவனங்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. இருந்தாலும் சேவைத் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23) பின்னிரவு, உலகளவில் ஆக அதிகமாக விமானப் போக்குவரத்தைக் கையாளும் இரு விமான நிலையங்களான டொஹா, துபாய் விமான நிலையங்களில் களேபரமான சூழல் நிலவியது. பல மத்திய கிழக்கு நாடுகள் விமானப் போக்குவரத்துக்கான தங்கள் வான்வெளியைத் தற்காலிகமாக மூடியது அதற்குக் காரணம்.
அதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. அவர்களில் பல சிங்கப்பூரர்களும் அடங்குவர்.
இப்போது விமானச் சேவைகள் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தாலும் பூசல் தொடரும் பகுதிகளின் வான்வெளியைத் தவிர்க்க விமானப் பாதைகளை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பயண நேரம் அதிகரிக்கும் என்று விமான நிறுவனங்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆசிய, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையே உள்ள பாதைகளுக்கு இது பொருந்தும்.
இதுகுறித்துப் பேசிய, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவில் போக்குவரத்து விவகாரங்களை ஆராயும் துணைப் பேராசிரியர் லின் வெய்ச்சியாங், “வழக்கமான பயணப் பாதைகள் விரைவில் திறக்கப்படாவிட்டால் மேலும் விமானச் சேவைகள் தாமதமடையலாம், சேவை நேரத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்,” என்று சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கோ ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கோ தாங்கள் வழங்கும் சேவைகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை என்று லுஃப்டான்சா குழுமம் தெரிவித்தது. எனினும், அதன் விமானச் சேவைகள் பயணங்களை மேற்கொள்ள கூடுதலாக ஒரு மணிநேரம் வரை ஆகலாம்.

