சிங்கப்பூரில் புகைமூட்டத்தை ஏற்படுத்திய இந்தோனீசியத் தீச்சம்பவங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களை விசாரித்து, பொறுப்பேற்கச் செய்ய, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆறு நிறுவனங்களும் வழக்கறிஞர் ஒருவரும் அக்குழுவில் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட அமைச்சும் தேசியச் சுற்றுப்புற வாரியமும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனைத் தெரிவித்தன. முன்னதாக, இக்குழு அமைப்பது குறித்து அக்டோபர் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இக்குழுவில், ‘கன்ட்ரோல் ரிஸ்க்ஸ் குரூப்’, ‘எஃப்டிஐ கன்சல்டிங் (சிங்கப்பூர்)’, ‘குரோல் சிங்கப்பூர்’ ஆகிய புலனாய்வு நிறுவனங்களும் ‘டென்டன்ஸ் ரோடிக் அண்ட் டேவிட்சன் எல்எல்பி’,‘டிஎஸ்எம்பி லா கார்ப்பரேஷன்’, ‘வோங்பார்ட்னர்ஷிப் எல்எல்பி’ ஆகிய சட்ட நிறுவனங்களும் ‘டக்ஸ்டன் ஹில் சேம்பர்ஸ்’ நிறுவனத்தின் டோபி லாண்டாவ் கேசி எனும் சட்ட ஆலோசகரும் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடயவியல் புலனாய்வு, நிதிப் பகுப்பாய்வு, நிறுவன நுண்ணறிவு, இடர் ஆலோசனை, சட்டச் சேவைகள் ஆகியவற்றில் இந்த நிறுவனத்தினர் நிபுணத்துவம் கொண்டுள்ளனர். அரசாங்கம் அடையாளம் கண்டுள்ள சில நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதால் சில சட்ட நிறுவனங்கள் இதில் நியமிக்கப்படவில்லை.
தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழுவில் மேலும் பலர் சேர்க்கப்படலாம். தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் செயலாற்றுவதில் உள்ள வரம்புகள் காரணமாக வெளித்தரப்புகள் ஈடுபடுத்தப்படுகின்றன. தவீந்தர் சிங் சேம்பர்ஸ் நிறுவனம் இப்பணிகளை ஒருங்கிணைக்கும்.
முன்னதாக, எல்லை தாண்டிய புகைமூட்டத் தூய்மைக்கேட்டுச் சட்டத்தின்கீழ் முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள வில்மார் இண்டர்நேஷனல், ஏபிபி உள்ளிட்ட 10 சிங்கப்பூர் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அமைச்சர்கள் புதன்கிழமை (அக்டோபர் 28) தனிப்பட்ட கூட்டத்தில் சந்தித்துப் பேசினர். மூத்த அமைச்சர் கா. சண்முகம், துணைப் பிரதமர் கான் கிம் யோங், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஆகியோர் அதில் பங்கேற்றனர்.
நிறுவனங்கள் தங்கள் சொந்தச் செலவில் வல்லுநர் குழுவை நியமித்து விநியோகத் தொடர், செயல்பாடுகளை ஆய்வுசெய்து வாரியத்திடம் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
நிறுவனங்களை விசாரிக்க தேசியச் சுற்றுப்புற வாரியத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் அது குற்றமாகக் கருதப்படும் என்று திரு சண்முகம் எச்சரித்தார். ஆய்வறிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
