வளர்ச்சி, வேலைகளைப் பாதுகாக்க ஏழு உத்திகள் பரிந்துரை

வளர்ச்சி, வேலைகளைப் பாதுகாக்க ஏழு உத்திகள் பரிந்துரை

2 mins read
876c8afe-4d32-4813-b685-f366c9daed06
அடுத்த பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியைச் சராசரியாக இரண்டு முதல் மூன்று விழுக்காடு என்ற அளவில் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தொழில்நுட்பமும் தன்னைப்பேணித்தனமும் உலகப் பொருளியலை மாற்றிவரும் சூழலில் வளர்ச்சியையும் வேலைகளையும் பாதுகாக்க கவனமான நடவடிக்கைகளையும் புதிய முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டும் எனச் சிங்கப்பூர் பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

கடந்த 2025ல் அமைக்கப்பட்ட அந்த ஐந்து பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்கள், ஏழு பரிந்துரைகளுடன் கூடிய இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளன.

அடுத்த பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியைச் சராசரியாக இரண்டு முதல் மூன்று விழுக்காடு என்ற அளவில் நிலைநிறுத்துதல், சிங்கப்பூரர்களுக்குப் புதிய வேலைகளை உருவாக்குதல், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின்மூலம் பயன்பெறும் வகையில் அவர்களை ஆயத்தப்படுத்துதல் உள்ளிட்டவை அந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.

துணைப் பிரதமர் கான் கிம் யோங், தற்காலிகப் போக்குவரத்து அமைச்சரும் நிதிக்கான மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ், தற்காலிகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் கல்விக்கான மூத்த துணை அமைச்சருமான டேவிட் நியோ ஆகியோர் வியாழக்கிழமை (ஜனவரி 29) செய்தியாளர்களைச் சந்தித்து, அந்த ஏழு பரிந்துரைகளையும் வெளியிட்டனர்.

90களில் ஏற்பட்ட ஆசியப் பொருளியல் நெருக்கடி, 2008ல் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி, கொவிட்-19 பெருந்தொற்று போன்ற முந்தைய நெருக்கடிகளைப் போலல்லாமல், சிங்கப்பூர் இப்போது வேறுவகை நெருக்கடியை எதிர்கொள்வதாக இன்னொரு ஊடக நேர்காணலின்போது துணைப் பிரதமர் கான் குறிப்பிட்டார்.

“இப்போதைய நெருக்கடி முற்றிலும் மாறுபட்டது. புதுவகை உலகத்திலிருந்து நாம் உருவெடுக்க வேண்டியுள்ளது. நாம் முன்பிருந்த நிலைக்கு ஒருபோதும் செல்ல முடியாது.

“அதனால், இதற்குமுன் நாம் செய்தவற்றுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்படியான சில பரிந்துரைகள், நடவடிக்கைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது,” என்றார் அவர்.

முக்கிய வளர்ச்சித் துறைகளில் அனைத்துலகத் தலைமைத்துவத்தை நீட்டித்தல், புதிய பொருளியல் வளர்ச்சித் துறைகளை உருவாக்கும் வகையில் புதிய வாய்ப்புகளைத் தொடர்தல், ‘ஏஐ’ துணையுடனான பொருளியல் மூலம் சிங்கப்பூரை ‘ஏஐ’ தலைவராக நிறுவுதல், அனைத்துலகச் சந்தைகளுடனான தொடர்புகளை மேம்படுத்தி, நிறுவனங்கள் அனைத்துலகமயமாக ஆதரவளித்தல், நல்ல வேலைகளுக்கான எல்லைகளை விரிவுபடுத்தல், வாழ்நாள் கற்றலை நடைமுறைச் செயலாக்குதல், மாற்றங்களைச் செயல்திறனுடன் மேற்கொள்ள நிறுவனங்களுக்கு உதவுதல் ஆகியவையே அந்த ஏழு பரிந்துரைகள்.

பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்களின் இந்தப் பரிந்துரைகள் இடைக்கால, நீண்டகால நோக்கில் அமைந்தவை என்றும் மாற்றத்தைத் தழுவி, உலகிற்குப் பொருத்தமானதாகவும் போட்டித்தன்மையுடனும் சிங்கப்பூர் நீடிப்பதற்கு அனுமதிக்கும் ஒரு பொருளியல் உத்தியை அரசாங்கம் திட்டமிடுவதற்கு அவை உதவும் என்றும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், அனைவரையும் உள்ளடக்கிய பொருளியல் வளர்ச்சியையும் நல்ல வேலைகளை உருவாக்குவதைத் தொடர்வதையும் உறுதிசெய்ய அவை இலக்கு கொண்டுள்ளன.

அறுபதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், நிறுவன வருகைகள் மூலமாக நிறுவனங்களுடனும் ஊழியர்களுடனும் கலந்தாலோசித்த பின்னர் பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்கள் இந்தப் பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளன. அவை இவ்வாண்டு நடுப்பகுதிக்குள் இறுதிசெய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்