அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறை, மெட்டா நிறுவனம் ஆகியவை அளித்த தகவலின் அடிப்படையில் சட்டவிரோதச் சூதாட்டக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் எழுவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
அவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள். அவர்கள்மீது சட்டவிரோதமாகச் சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 6) குற்றம் சுமத்தப்பட்டது.
மீதமுள்ள மூவரிடம் காவல்துறை விசாரணை நடத்து வருகிறது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இணையச் சூதாட்டத் தளத்தில் கணக்குகளைத் தொடங்கச் சிங்கப்பூரர்களைச் சிலர் தூண்டுவதாகப் புகார்கள் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சூதாட்டப் புள்ளிகளைப் பெறுவதற்காகச் செலுத்த வேண்டிய பணத்தைப் பெயர் குறிப்பிடாத வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்துமாறு பாதிக்கப்பட்டவர்களை மோசடிக் கும்பல் அறிவுறுத்தியது.
மேலும், சூதாட்டத்தில் வெற்றி பெற்றால் அதற்கான தொகையையும் அந்தப் பெயர் குறிப்பிடாத வங்கிக் கணக்குகளிலிருந்து அனுப்பப்படும் என்றும் அது சொன்னது.
அந்த மோசடிக் கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக $175,000க்கும் அதிகமான பணத்தை இழந்ததாக அது கூறியது.
சிங்கப்பூரையும் மற்ற ஆசிய நாடுகளையும் குறிவைத்து அந்த இணையத்தளம் செயல்பட்டதாகவும் காவல்துறையின் கண்காணிப்பிலிருந்து தப்பிப்பதற்காக அது வெளிநாட்டிலிருந்து இயங்கியிருக்கலாம் எனவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கிடைத்த தகவலின் அடிப்படையில் புக்கிட் பாத்தோக், ஹவ்காங், பாசிர் ரிஸ் உட்பட பல்வேறு இடங்களில் குற்றப் புலனாய்வுத் துறை, காவல்துறை உளவுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடுதல் நடவடிக்கைகளில் சிக்கிய எழுவரிடமிருந்து 15 வங்கிக் கணக்குகள், $5,00,000 மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்கள், கணினி, கைப்பேசி, சிம் அட்டைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரர்களான 28 வயது ஓங் வெய் ஜீ, 39 வயது சாமுவேல் சியாம், 52 வயது சோங் யோங் ஷெங், 35 வயது ஷூக் ஜின் யோங் ஆகியோர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தடுப்புக்காவலில் இருக்கும் நால்வரின் வழக்குகளும் அக்டோபர் 13ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.