தீவு விரைவுச்சாலையில் (பிஐஇ) பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கிய இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
நவம்பர் 5ஆம் தேதி இரவு 9.55 மணி அளவில் பிஐஇ விரைவுச்சாலையில் சாங்கியை நோக்கிச் செல்லும் வழியில் ஏழு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்து தொடர்பில் 43 முதல் 59 வயதுடைய நான்கு கார் ஓட்டுநர்கள் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
37 வயது கார் ஓட்டுநரும் 26 வயதுப் பயணியும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தில், நான்கு வழிச்சாலையின் முதல் மூன்று தடங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
சாலையில் உலோகத் துண்டுகளும் வாகனச் சிதைவுகளும் சிதறிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது. கடுமையாகச் சேதமடைந்த வெள்ளை நிற கார் ஒன்று இரண்டாவது, மூன்றாவது தடங்களுக்கு இடையே நிற்கிறது.
அதேபோல் முதல் தடத்தில் மூன்று கார்கள் வரிசையாக நிற்கின்றன. அவற்றுக்கு முன்னால் ஓர் அவசர உதவி வாகனமும் தீயணைப்பு வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சிங்கப்பூர் விரைவுச்சாலைகளில் ஒரு வாரத்திற்குள் நிகழ்ந்த மூன்றாவது பல வாகன விபத்து இதுவாகும்.
நவம்பர் 4ஆம் தேதி நடந்த விபத்தில் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நவம்பர் 5ஆம் தேதி ஏஒய்இ விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 13 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
